வடக்கு ஆளுநர் ராஜினாமா ; புதிதாக வருகிறார் பாலிக்ககார !

0
185

palikhahara-வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜீ.எஸ்.பாலிக்ககார நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநர் பாலிக்ககார கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகக் கடமையாற்றியவர். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியுமாவார். இவர் தனது பொறுப்பை எதிர்வரும் வாரம் ஏற்கவுள்ளார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

இதேவேளை 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை காலமும்  முன்னாள் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி வடக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றி வந்தவர். எனினும் ஆட்சி மாற்றத்தையடுத்து சந்திரசிறி தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே புதிய ஆளுநர் பதவிக்கு பாலிக்ககார நியமிக்கப்பட்டுள்ளார். நாளை யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ள ஆளுநர் சந்திரசிறி தனது ராஜினாமாவை திங்கட்கிழமை செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சந்திரசிறி நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவிற்கு சென்று குடியேற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சந்திரசிறி வடக்கு மாகாணத்தில் அடாவடித்தனத்தை மேற்கொண்டு வருகின்றார் என்றும் வடக்கு மாகாணத்தின்  செயற்பாடுகளுக்கு தடையாக உள்ளார் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தது.

அத்துடன் ஆளுநரை மாற்றுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் பல தடவைகள் வடக்கு முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் ஆளுநரை மாற்றுவதாக உறுதியளித்த முன்னாள் ஜனாதிபதியும்  தனது நலன்கருதி மீண்டும் ஆளுநராக சந்திரசிறியை நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here