யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல நகை கடையொன்றின் உரிமையாளரால் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏனைய ஊழியர்களால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டமையை அடுத்து குறித்த கடை உரிமையாளர் நேற்றுமுன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த வெள்ளிக்கிழமை குறித்த நகைக் கடையில் பணியாற்றும் ஊழியர் தனது பணி நிறைவடைந்து மாலை வீடு சென்றுள்ளார்.
இதன் போது அவரது வியாபார நிலைய உரிமையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேலதிகமாக வேலையொன்று இருப்பதாக கூறியுள்ளார்.
இந் நிலையில் குறித்த பணியாளர் தமது வீட்டிற்கு செல்வதற்காக இறுதிப் பேருந்தில் இருப்பதாகவும் எனவே தான் செய்ய வேண்டிய மேலதிக வேலை தொடர்பான விபரத்தையும் பொருட்களையும் நண்பரிடம் அனுப்பி வைக்குமாறு தெரிவித்திருந்தார். .
இதன் பின்னர் குறித்த நபரின் கைத்தொலைபேசி செயலிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மறுநாள் வழமை போலவே பணிக்கு வந்த குறித்த ஊழியரை வியாபார நிலைய உரிமையாளர், தொலைபேசிக்கு தாம் தொடர்பு கொண்ட போதும் அதற்கு பதிலளிக்கவில்லை என கூறி மிகக் கடுமையாக தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் குறித்த உரிமையாளர் பணியாளரிடம் தாக்குதல் சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாதென அச்சுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பணியாளர் நேற்று முன்தினம் குறித்த கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மயக்கமடைந்து வீழ்ந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்களால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது தனது உரிமையாளரினால் தாக்குதலுக்குள்ளான சம்பவத்தை நண்பர்களிடம் குறித்த பணியாளர் தெரிவித்ததையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே குறித்த வியாபார உரிமையாளர் நேற்று முன்தினம் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த பணியாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவேளை அவரை வெளியில் அழைத்து குறித்த வழக்கிலிருந்து விலகுமாறு சமரச முயற்சியில் நேற்று முன்தினமிரவு பொலிஸாருடன் சென்ற ஒருசிலர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
சிகிச்சை பெற்ற ஒருவரை வெளியில் அழைத்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பாதிக்கப்பட்ட பணியாளரின் நண்பர்களினால் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.