இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் சிறை வாழ்க்கை எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் 25 வருட நிறைவை சந்திக்கின்றது.
இந்த நிலையில், இவர்களின் விடுதலையை வலியுறுத்தி இம்மாதம் 11 ஆம் திகதி பாரிய பேரணி இடம்பெறவுள்ளது.
விசாரணைக்காகவே அழைத்துச் செல்கின்றோம் என்ற வாக்குறுதியுடன் கடந்த 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளனை சிறைக்கதவுக்குள் முடக்கியுள்ளதாக பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
தள்ளாத வயதில் தனிமையில் வாடும் அற்புதம்மாள் தனது மகனின் விடுதலைக்காக தளராது போராடி வருகின்றார்.
தனது முன்னாள் பதவிக்காலங்களிலும் தற்போதும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏனையோரின் விடுதலையை வலியுறுத்தி வரும் தமிழக முதல்வர் ஜெயலிதா ஜெயராம், இந்தப் பேரணிக்கு அனுமதி வழங்கி தனது ஆதரவை நல்கியுள்ளார்.
பேரறிவாளனுடன் முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் உள்ளிட்டவர்களும் சிறைக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் விடுதலையை வலியுறுத்திய பேரணியை வேலூரில் இருந்து கோட்டையை நோக்கி முன்னெடுக்க பேரறிவாளனின் தாயார் தமிழக முதல்வரிடம் அனுமதி கோரியிருந்தார்.
இதற்கான அனுமதியை தமிழக முதல்வரும் வழங்கியுள்ளார்.
இதேவேளை, இந்தப் பேரணிக்கு வலுச்சேர்த்து சர்வதேச அளவில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தென்னிந்திய நடிகர் சங்கமும் பேரணியில் பங்கேற்பதற்கான அழைப்பை விடுத்துள்ளது.
இந்நிலையில், தண்டனைக்காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டதன் காரணத்தை விளக்குமாறு பேரறிவாளன் மனு மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
3 ஆவது நபர் ஒருவரின் விடுதலை விபரங்களைக் கோர முடியாது என்ற அடிப்படையில் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.