பிரான்ஸ் பாரீஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் உடல் கருகி 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரீஸில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் பாரீஸ் நகரமே ஸ்தம்பித்தது. ஆங்காங்கு ஏற்பட்ட விபத்துக்களில் 4 பேர் பலியாயினர்.
தற்போது வெள்ளத்தில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், மேற்கு பாரீஸில் உள்ள Saint-Denis என்ற பகுதியில் மற்றொரு சோக சம்பவம் நிகழ்ந்ததுள்ளது.
இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்களுக்கு நேற்று மாலை 7.30 மணியளவில் தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கட்டிடத்திற்குள் நுழைந்து சோதனை செய்தபோது, இடுக்குகளில் சிக்கி 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளது தீயணைப்பு வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா என்பது குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
தீவிபத்து நிகழ்ந்தபோது 4-வது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக தீக்காயங்களுடன் குதித்த 9 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீயணைப்பு எங்கிருந்து தொடங்கியது என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளப் பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் மீண்டு வரும் நிலையில், தற்போது தீவிபத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.