ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதிலும் தமிழரின் பிரச்சினைகள் தீரவில்லை-சம்பந்தன்

0
235

Sampanthan-800x450நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்பது உண்மை. அதனால், தமிழ் மக்களின் பிரச்சனைகள் முழுவதுமாக தீர்ந்து விட்டன என்று கூற முடியாது. எமது மக்கள் பிரச்சனைக்கு தீர்வு வருவதாக இருந்தால், அவர்களின் உடனடித் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். இணுவில் அருணகிரிநாதர் ஆலய சூழலில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுநோக்கு மண்டபத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு சம்பந்தன் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த ஆட்சியில் தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற பல அநீதிகள் இந்த ஆட்சியில் இல்லை. அது வரவேற்கத்தக்க விடயம். வரவேற்க வேண்டிய விடயம்.

இந்த ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் மக்கள் தங்கள் பாரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள். மக்கள் தங்களது பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று நம்பினார்கள். காணிகள் சம்பந்தமான விடயம், காணாமல் போனோர் விடயம், சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விடயம், வேலை வாய்ப்பு விடயம் என பல தீர்வுகள் கிடைக்கும் என நம்பினார்கள்.

அதில், ஒரு சில விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இன்னும் இடம்பெற வேண்டியவை நிறையவே இருக்கின்றன. இராணுவ முற்றுகைக்குள் இருக்கும் பாரியளவான மக்கள் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். விசாரணைகளின்றி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்கள் சம்பந்தமான பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும். காணாமல் போனோர் விடயத்தில் முழுமையான தீர்வு வேண்டும்.

ஒருமித்த நாட்டுக்குள், பிளவுபடாத இலங்கைக்குள், பொருளாதார ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக கட்டியெழுப்புவதற்கு நாங்கள் விரும்புகின்றோம். இந்த நிலைமையை நாங்கள் விரைவாக அடைய வேண்டும். அழிந்த வடகிழக்கை கட்டியெழுப்ப சர்வதேச நிதியுதவியுடன் கருமங்கள் ஆற்ற இருப்பதாக அறிகிறோம். வடகிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடனும் கலந்தாலோசிக்க வேண்டும்.

நாட்டில் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. இதன்மூலம் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். அவ்வாறு கிடைக்கும் தீர்வு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் தீர்வாக இருக்கவேண்டும்’

‘புதிய அரசியல் சாசனத்தினூடாக கொண்டுவரப்படும் அரசியல் தீர்வானது மக்களால் ஏற்றுகொள்ளப்படக்கூடியதாக இருக்கும் அதேவேளை, நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும். நாம் ஒருமித்த ஒரு நாட்டுக்குள் வாழக்கூடிய வகையிலும் மக்களின் இறைமை பகிர்ந்தளிக்கப்படுகின்ற அடிப்படையில் மக்கள் தமது பிராந்தியங்களில், மாகாணங்களில் கணிசமான அளவிலேனும் தம்மை தாம் ஆளும் சுயாட்சி முறைமை தேவை. இம்முறைமை பல நாடுகளில் உள்ளது. நாம் புதிதாக ஒன்றையும் கேட்கவில்லை. எமது மக்களின் பிறப்பு உரிமையையே கேட்கின்றோம். அதனை யாரும் மறுக்கமுடியாது. இதனை பெற்றுக்கொள்வத்றகாக நாம் பல்வேறுப்பட்ட போராட்டங்களையும் இழப்புக்களையும் கடந்து வந்துள்ளோம்’

போருக்கு முன்னரைவிட போருக்கு பின்னர் தற்போது எமது பிரச்சினை அதிகமாக சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரால் முன்வைக்கப்படவுள்ள வாய்மூல அறிக்கைக்கு முன்னதாக இல்ஙகை அரசாங்கம் தனது நிலைப்பாடு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும்’ ‘உண்மையான நீதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகாரம், மீண்டும் இவ்வாறு இடம்பெறாமல் இருப்பதற்கான ஒழுங்குமுறை இதுவே தற்போதைய நிலைமையாக உள்ளது.

இது இடம்பெற்றால் நாட்டில் விசுவாசமான நல்லிணக்கம் ஏற்பட்டு சமத்துவத்தின் அடிப்படையில் குறித்த விடயங்கள் செய்யப்படவேண்டும். எமக்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை நாம் பக்குவமாகவும் ஒழுங்காகவும் செயற்படுத்தவேண்டும். வன்முறையை முழுமையாக நிராகரிக்கவேண்டும். எமது மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. வன்முறை மூலம் இல்லாமல் அனைவரது ஆதரவுடனும் தீர்வை பெற்றுக்கொள்ளவேண்டும். இன்று சர்வதேச சமூகத்தின் ஆதரவு எமது பிரச்சனை சார்பில் ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே, எமது இழப்புக்கள் வீண்போகாமல் அவை ஆர்த்மானதாக இருக்கவேண்டும். வன்முறையை பின்பற்றுவதன் மூலம் எதையும் சாதிக்கமுடியாது. இன்று எமக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக உள்ளது’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here