திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் முன்வைத்த பரிந்துரையை பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் நிராகரித்துள்ளனர்.
மனிதப் புதைக்குழி தொடர்பான வழக்கு மன்னார் நீதவான் ஏ ஜி அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று இடம்பெற்றது.
இதன் போது புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் பகுப்பாய்விற்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள நிறுவனமொன்றுக்கு கொண்டு செல்ல வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம் பரிந்துரைத்த மூன்று இடங்களை நிராகரித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அமெரிக்காவின் புளோரிடாவுக்கு அனுப்ப தீர்மானித்துள்ளமை குறித்து தமது எதிர்ப்பை வௌியிடுவதாக காணாமல் போனோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுள் ஒருவரான வி எஸ் நிரஞ்சன் கூறினார்.
இதேவேளை மனிதப் புதைகுழிக்கு அருகில் அடையாளங்காணப்பட்ட கிணறு சம்பந்தமான வழக்கும் மன்னார் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தற்போது சட்ட வைத்திய அதிகாரி டீ ஏல் வைத்தியரத்தினவால் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டு வருவதுடன் அதற்கான அனுமதி கிடைத்தவுடன் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க முடியும் என பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான் இரண்டு நிறுவனங்கள் அறிக்கை மற்றும் மேலதிக அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் புதைகுழி அகழ்வுகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மற்றும் இறுதித் தீர்மானம் தொடர்பிலும் நீதிமன்றத்தில் அறிவிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டு வழக்குகளையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.