பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதாரங்களை சீராக்க 33,447 கோடி ரூபாய் தேவைப்படும் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக பாரீஸில் உள்ள Seine நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.
இதுமட்டுமில்லாமல், Seine, Loing மற்றும் Yonne ஆகிய 3 நதிகளின் கரைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதாரத்தை உண்டாக்கியது.
பிரான்ஸில் பெய்த மழைக்கு 4 பேர் பலியாகியுள்ளதாகவும், 24 பேர் வரை படுகாயமுற்றுள்ளதாக பிரான்ஸ் பிரதமரான மேனுவல் வால்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
பாரீஸ் நகரை புரட்டிப்போட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரும் பாதித்த மழை தற்போது முடிந்து வெள்ளத்தின் அளவும் குறைந்துள்ளது.
பாரீஸ் மாநகர் முழுவதும் ஏற்பட்ட வெள்ள சேதாரத்தை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பார்வையிட்டுள்ளனர்.
இந்த வெள்ள சேதாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதாரத்தை சீரமைக்க சுமார் 2 பில்லியன் யூரோ(3,34,47,21,27,000 இலங்கை ரூபாய்) தேவைப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரீஸ் நகரின் பெரும்பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், சேதாரம் ஏற்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.