ஆறு கிலோ மீற்றர்களுக்குள்ளிருந்த மக்கள் வெளியேற்றம்
அவிசாவளை பகுதியில் கொஸ்கம என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள சாலாவ இராணுவ முகாமின் தோட்டாக்கள் அடங்கிய ஆயுத களஞ்சியத்தில் நேற்றுமாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பிரதேசம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்ததுடன் சாலாவ பிரதேசத்தை சுற்றி ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
அத்துடன் இந்த வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் காயமடைந்த மூவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் காயமடைந்தவர்களில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.இராணுவ முகாமில் திடீரென ஏற்பட்ட தீயானது தோட்டாக்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இடத்துக்கு பரவியதன் காரணமாக பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.
அத்துடன் தொடர்ச்சியாக வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இதனால் பொது மக்கள் கடும் பதற்றத்துக்கு உள்ளாகியதுடன் கொழும்பை நோக்கி ஓட ஆரம்பித்தனர். மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டேயிருந்தன . மேலும் சம்பவத்தில் இராணுவ முகாமுக்கு அருகில் இருந்த வர்த்தக நிலையம் ஒன்றும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
மக்கள் அல்லோலகல்லோலம்
இந்த சம்பவம் காரணமாக சாலாவ அவிசாவளை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நேற்று இரவு பதற்ற நிலை காணப்பட்டதுடன் மக்கள் அல்லோலகல்லோலபட்டு அங்கும் இங்கும் ஓடித்திரிந்தனர். மேலும் பிரதேசம் முழுவதும் பாரிய தீ வெ ளிச்சம் காணப்பட்டதுடன் யாரும் நெருங்க முடியாத நிலையும் நிலவியது.
மின்சாரம் துண்டிப்பு
அது மட்டுமன்றி வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதுடன் அவிசாவளை பகுதியை அண்டிய அனைத்து பிரதேசங்களிலும் மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு வரை அதிகமான பிரதேசங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் சில பிரதேசங்கள் இருளில் மூழ்கினாலும் தீச்சுவாலை காரணமாக சாலாவ பிரதேசம் முழுவதும் வெளிச்சமாகவும் காணப்பட்டது.
கடும் போராட்டத்துடன்
தீயணைப்பு போராட்டம்
அத்துடன் நேற்று நள்ளிரவைு வரை இராணுவ முகாமில் ஏற்பட்ட இந்த தீயை அணைப்பதற்காக பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் தொடர்ச்சியாக இராணுவ முகாமிலிருந்து தீ பிழம்புகள் எழுந்த வண்ணமே இருந்தன. இதனால் பாதுகாப்பு படையினர் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட எவரினாலும் நேற்று நள்ளிரவு வரை குறித்த இராணுவ முகாம் அமைந்திருக்கும் பிரதேசத்தை நெருங்கவே முடியாமல் இருந்தது.
எங்கும் புகை மண்டலம்
நேற்று மாலை 5.45 மணியளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தினால் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டதுடன் மக்கள் பல திசைகளிலும் பதறியடித்துக்கொண்டு ஓடினர். அத்துடன் சாலாவ பிரதேசமே புகையினால் நிறைந்திருந்ததுடன் தீச்சுவாலைகள் வானத்தை நோக்கி எழுந்த வண்ணம் காணப்பட்டன.
மக்களை வெளியேற்ற
நடவடிக்கை
அத்துடன் சாலாவ இராணுவ முகாமைச் சுற்றி ஆறு கிலோ மீற்றர்கள் வரை மக்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் வெளியேற்றிய வண்ணம் இருந்தனர். மக்களும் பதறியடித்துக்கொண்டு ஓடினர். மேலும் குறித்த இராணுவ முகாமில் அமைந்துள்ள எண்ணெய் குதத்தை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
ஹெலிகப்டர்கள்
ஊடாக நீர் பாய்ச்சல்
இராணுவ முகாமிலிருந்து மேலெழும்பிய தீயை கட்டுப்படுத்துவற்கு ஹெலிகொப்டர்கள் மற்றும் வானூர்திகள் ஊடாக நீரை வாரி இறைத்தபோதும் தீயை அணைக்கும் செயற்பாடானது பாரிய சவாலுக்குரியதாகவே காணப்பட்டது. குறிப்பாக முப்படையினரும் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து கடுமையாக போராடினர். எனினும் தீச் சுவாலைகள் சீறிய வண்ணமே இருந்தன.
வீதி மூடப்பட்டது
மேலும் சாலாவ இராணுவ முகாமிலிருந்து ஓரிரு கிலோ மீற்றர்கள் தூரத்தில் அம்பியூலன்ஸ்கள் தயாராக வைக்கப்பட்டிருந்ததுடன் வைத்தியர்களும் தயார் நிலையில் இருந்தனர். மேலும் கொழும்பு அவிசாவளை ஹைலெவல் வீதி நேற்றிரவு தற்காலிகமாக மூடப்பட்டது. அத்துடன் இராணுவ தளபதி கிரிஷாந்த டி. சில்வா குறித்த சம்பவ இடத்துக்கு நேற்றிரவு விஜயம் செய்திருந்தார்.
பல வைத்தியசாலைகள்
இதனிடையே கொழும்பு தேசிய வைத்தியசாலை அவிசாவளை ஹோமாகம, கொஸ்கம வைத்தியசாலைகள் உள்ளிட்ட வைத்தியசாலைகளிலும் அம்பியூலன்ஸ் வண்டிகளும் நேற்று இரவு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மக்கள் அதிகம் செறிந்து வாழ்கின்ற பிரதேசத்தில் இந்த இராணுவ முகாம் அமைந்துள்ளதுடன் இதனால் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதுடன் மக்கள அல்லோலகல்லோலப்பட்டனர்.
அது மட்டுமன்றி இராணுவ முகாமிலிருந்து கிலோ மீற்றர்கள் சுற்றுப்புறத்தில் வசிக்கின்ற மக்களை வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாலும் மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியதையும் அவதானிக்க முடிந்தது.
இராணுவ பேச்சாளர்
இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தகவல் தருகையில்,
சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீயானது தோட்டாக்கள் வைக்கப்பட்டிருக்கும் களஞ்சிய அறைக்கு பரவியதன் காரணமாகவே வெடிப்பு சம்வங்கள் இடம்பெற்றன. அத்துடன் தீயும் பாரியளவில் பரவியது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் இராணுவம் மற்றும் விமானப் படையினரை அங்கு அனுப்பி வைத்தோம். அதன் பின்னர் தீ அதிகமாக பரவியதன் காரணமாக மேலும் பல்வேறு பகுதிகளுக்கும் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் உடனடியாக தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே பிரதேசத்தில் வசிக்கின்ற பொது மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமது இருப்பிடங்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு தப்பியோடிய மக்களின் உடமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம் என்றார்.
இராணுவ தளபதி
மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்த இராணுவ தளபதி கிரிஷாந்த டி. சில்வா தகவல் வெளியிடுகையில்
சம்பவம் இடம்பெற்றதுடன் விமான படையினரை அனுப்பி தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் ஹெலிகொப்டர்களைக்கொண்டு நீரை இறைத்து தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதே எமது பிரதான நோக்கமாக இருந்தது. அதனையே முன்னெடுத்துவருகின்றோம். பயிற்றுவிக்கப்பட்ட முப்படையினர் முகாமுக்குள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ மேலும் பரவுவதை அதிகளவில் தடுத்துள்ளோம். மேலும் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்ந்துவருகின்றோம். சேதங்கள் குறித்து உடனடியாக எதனையும் கூற முடியாதுள்ளது. தீயை முழுமையாக அணைத்த பின்னரே சேதங்கள் குறித்து குறிப்பிட முடியும். தீயை அணைப்பதே எமது பிரதான நோக்கம். மக்களை வெளியேற்றியுள்ளோம். தீயை முழுமையாக அணைத்த பின்னர் மக்களை மீண்டும் அவர்களின் இடங்களுக்கு அனுப்புவோம் என்றார்.
குடிநீரை பருகும்போது
கவனம் தேவை
இது இவ்வாறு இருக்க சம்பவம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தகவல் தருகையில்
காயமடைந்தவர்கள் அவிசாவளை மற்றும் ஹோமாகம மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்துள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெடிப்பொருட்கள் வெடித்துள்ளதால் நச்சுத்தன்மையான புகை வந்துள்ளது. அத்துடன் இந்த புகை காரணமாக பிரதேசத்தில் குடிநீரும் மாசுபடும் சாத்தியம் உள்ளது. எனவே ஏதாவது நோய் ஏற்படுமா என்ற அச்சம் ஏற்படலாம்.
எனவே பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் மருத்துமனைகளை எந்த நேரமும் நாடலாம். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும். அவ்வாறு ஏதாவது மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர் 0113071073 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு உதவி பெறலாம். அத்துடன் வெடிப்பு சம்பவத்தினால் பல்வேறு வெடிப்பொருடக்ளின் சிதறல்கள் கிணறுகள் மற்றும் நீர் நிலைகளில் விழுந்திருக்கலாம். எனவே மக்கள் குடிநீரை பருகும்போது சற்று அவதானமாக இருக்கவேண்டும் என்றார்.
கொழும்பை நோக்கி ஓடினோம்
இதேவேளை சம்பவத்தை நேரில் கண்ட பொது மகன் ஒருவர் தகவல் வெளியிடுகையில்
பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது. அத்துடன் தீச்சுவாலை வந்தது. அதனையடுத்து எங்களை கொழும்பை நோக்கி ஓடுமாறு கோரினர். நாங்களும் ஓடிவந்துவிட்டோம். அதன் பின்னர் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றார்.
மற்றுமொரு பொதுமகன் குறிப்பிடுகையில்
இராணுவ முகாமில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து பாரிய புகைமண்டலம் காணப்பட்டது. எங்களுக்கு சுவாசிப்பதற்கு கடினமாக இருந்தது. நாங்கள் தப்பி ஓடிவந்தோம். முதலில் ஓடி வந்தோம். பின்னர் இராணுவ வாகனங்களில் ஏறி வந்தோம். பாரிய சத்தம் கேட்டது. மிகப்பெரிய தீச்சுவாலைகள் வந்ததை கண்டோம் என்றனர்.
புகையை
சுவாசிக்கவேண்டாம்
இது இவ்வாறு இருக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகையில்
வெடிப்புச் சம்பவத்தை அடுத்து வெளிவந்த புகை மாசுபட்டதாக இருக்கலாம். எனவே இந்த புகையை யாரும் சுவாசிக்காமல் இருப்பது நல்லதாகும். அத்துடன் அவ்வாறு புகையை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டால் முகத்தை ஈரத்துணியினால் மூடிக்கொள்வது சிறந்தது என்றார்.
100 க்கும் மேற்பட்ட
தீயணைப்பு வாகனங்கள்
இதேவேளை நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்களும் நீர் பவுசர்களும் குறித்த பிரதேசத்தை நேற்று நள்ளிரவு வரை வந்துகொண்டிருந்தன. எனினும் நள்ளிரவுவரை இராணுவ முகாமுக்குள் வெடிப்பு சம்பவங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அத்துடன் பிரதேசத்துக்கு அருகில் நின்றுகொண்டிருந்த படையினர் பொலிஸார் மற்றும் ஊடகவியலாளர்கள் கண்கள் எரிச்சல் போன்ற அசௌகரியத்தை எதிர்கொண்டிருந்தனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தகவல் வெளியிடுகையில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
தேவையான வசதிகள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இராணுவ முகாமில் ில் இருந்த இராணுவ வீரர்களுக்கு என்ன நடந்தது? மற்றும் இராணுவ முகாமை அண்டிய பிரதேசங்களில் மக்களுக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்பட்டனவா என்பது தொடர்பிலும் பாதுகாப்பு தரப்பினர் ஆராய்ந்துவருகின்றனர். சுகாதார சேவைகளும் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மக்களுக்கு தேவையான அவசர தேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் அறிவுரைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தயாராக இருக்கின்றனர் என்றார்.
காயம்
சாலாவ இராணுவ முகாம் வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் காயமடைந்த மூவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இராணுவ வீரர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சி.ஐ.டி. விசாரணை
அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில் இன்றுகாலை சி.ஐ.டி. குழுவினர் குறித்த பகுதிக்கு செல்ல ஏற்பாடாகியுள்ளது.
Home
சிறப்பு செய்திகள் அவிசாவளை சாலாவ இராணுவ முகாமில் பாரிய வெடிப்பு;பிரதேசம் எங்கும் அல்லோல கல்லோலம்!