கோண்டாவிலில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்.சாலைக்கு முன்பாக இ. போ.ச ஊழியர்களினால் வழிமறிக்கப்பட்ட தனியார் சிற்றூர்தியின் சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்தில் இரு தரப்பினர்களும் மோதலுக்காக ஒன்றுகூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
எனினும் சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் நிலைமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இத் தாக்குதல் சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட தனியார் சிற்றூர்தி சாரதி மற்றும் நடத்துநரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப் பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான தனியார் சிற்றூர்தியினர் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கான சேவைகளில் ஈடுபடும் இ.போ.ச பேருந்துகள் கோண்டாவிலில் உள்ள யாழ்.சாலையினை வந்தடையும் போது பயணிகளை ஏற்றி வருகின்றார்கள். அதே போன்று யாழ்.சாலையில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்திற்கு செல்லும் போதும் பயணிகளை ஏற்றி வருகின்றார்கள்.
இவை இரண்டு செயற்பாடுகளும் தனியார் சிற்றூர்தியினரின் பயண நேரங்களில் வேண்டுமென்றே செய்யப்பட்டு வருகின்றது. இதனால் பயணிகள் எவரும் இல்லாமலும் நாங்கள் சேவையில் ஈடுபட வேண்டிய நிலை கூட ஏற்படுகின்றது. இதனால் சில வேளைகளில் இரு பஸ்களும் கலைபடுவதும் உண்டு. ஆனால் இதற்கு தனியார் சிற்றூர்தியினர் காரணம் இல்லை.
பயண நேர ஒழுங்குகளை மீறி பயணிகளை ஏற்றும் இ.போ.சவினாலேயே இந்நிலைமை ஏற்படுகின்றது. இதுபோன்ற சம்பவத்தினால் ஆத்திரமடைந்த இ.போ.ச ஊழியர்கள் இன்று (நேற்று) சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் சிற்றூர்தியினை பலாலி வீதி கோண்டாவிலில் அமைந்துள்ள யாழ்.சாலைக்கு முன்பாக மறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயத்திற்குள்ளானவர்களை கைது செய்து அழைத்துச் செல்லப்படுவது போல் பொலிஸ் வாகனங்களில் ஏற்றிச் செல்லுகின்றார்கள். ஆனால் தாக்குதல் நடத்திய இ.போ.ச ஊழியர்களை அவர்களுடைய வாகனங்க ளில் வருமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
இருப்பினும் நாங்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளோம் என்றனர். இது தொட ர்பாக இ.போ.ச ஊழியர்களிடம் கேட்ட போது, தனியார் சிற்றூர்தியினர் சட்டவிதிமுறைகளை மீறி பயணிகள் சேவைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுடன் எங்களுக்கு முரண்பாடுகள் ஏற்படுகின்றது.
இவ்வாறு முரண்பாடுகள் ஏற்படும் போது அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது. இதனாலேயே இன்று (நேற்று) இந்த சம்பவமும் நடந்தது என்றனர்.
இது தொடர்பாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கையில்;, இச் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.