மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் அண்மித்த பகுதிகளில் காணப்படும் இராணுவத்தின் தற்காலிக படை முகாம்கள் நிரந்தரமாக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் இராணுவத்தின் வசமுள்ள பொது மக்களது ஏனைய நிலங்கள் விடுவிக்கப்படுமா? என்ற ஏக்கம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
வசாவிளான் ஒட்டகப்புலம் முறிவு நெறிவு வைத்தியசாலை அமைந்துள்ள காணிக்கு அருகாமையில் அமைந்துள்ள இராணுவ முகாமே பாரிய வளைவுகளுடன் சீமெந்தினால் கட்டப்பட்டு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் தமது காணிகள் விடுவிக்கப்பதாதா? என்ற பெரும் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த பகுதியில் ஒட்டகப்புலம் பாடாசலை, ஒட்டகப்புலம் முறிவு நெறிவு வைத்திய சாலை, ஒட்டகப்புலம் தேவாலயம் என்பன அமைந்தள்ளன. இவற்றில் இது வரை ஒட்டகப்புலம் பாடசாலை விடுவிக்கப்படாத நிலையில், பாடசாலை கட்டடத்தை இராணுவம் தான் பயன்படுத்தி வருகின்றது.
இவற்றுக்கு அருகில் பொதுமக்கள் மீள்குடியேற ஆரம்பித்துள்ள நிலையில், தமக்கான வீடுகளினையும் கட்ட ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் குறித்த பகுதியில் இராணுவத்தின் பயிற்சி இடமும் அமைந்துள்ளது. இங்கு துப்பாக்கி சுடுதல், போன்ற பயிற்சிகளும் முன்னர் இடம்பெற்றதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இவற்றோடு அமைந்திருந்த இராணுவத்தின் முகாம் தற்காலிகாமாக அமைக்கப்பட்டு இராணுவம் அதில் நிலை கொண்டிருந்தது. எனினும் தற்போது குறித்த தற்காலிக படைமுகாம் பலாலி நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ள வளைவு போன்று சீமெந்தினால் கட்டப்பட்டு நிரந்தரமாக்கப்பட்டு வருகின்றது.
இராணுவம் குறித்த பகுதியில் நிலையான் படைமுகாமினை அமைப்பதனால் குறித்த காணிக்கு சொந்தமான பொதுமக்கள் ஏமாற்றத்தை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் உரியவர்கள் உடனடியாக எடுக்கப்படா விட்டால், தற்போது கட்ட ஆரம்பித்துள்ள படை முகாம் நிரந்தரமாக்கப்பட்டு விடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.