யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 12 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் சந்தேகநபர்கள் 12 பேரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பான தொடர் அறிக்கை பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதுதவிர, வித்யா படுகொலை வழக்கு தொடர்பில் கடந்த தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மரபணு பரிசோதனை அறிக்கையின் விசாரணை ஆராய்வுகள் இடம்பெறவில்லை.
கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது மாணவி வித்யா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் மரபணு பரிசோதனை அறிக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்குடன் தொடர்புடைய ஏனைய அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
வித்யா கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் ஒரு வருடத்திற்கான விளக்கமறியல் உத்தரவு கடந்த மே மாதம் 12 ஆம் திகதி முடிவுறும் தருவாயில் இருந்தது.
இந்த நிலையின் கீழ் மே மாதம் 11 ஆம் திகதி சட்ட மா அதிபர் சார்பாக யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசேட மனுவின் பிரகாரம் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நீடிக்கும் வகையில் சந்தேகநபர்களின் விளக்கமறியல் உத்தரவு ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது.