படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 12 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
2004 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் நீதியான மற்றும் துரிதமான விசாரணைகளை முன்னெடுத்தல், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு – காந்தி பூங்கா முன்றலில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் போது, கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் ஜனாதிபதி, ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொலிஸ் மாஅதிபருக்கு வழங்குவதற்காகக் கையளிக்கப்பட்டன.