நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி தொடருந்து பாதையின் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று (ஜூன் 1 ஆம் திகதி) திறக்கப்பட்டது.
இதற்காக கோலாகலமான திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதைக்கான ஆரம்ப வடிவமைப்பு முதன் முதலில் 1947 ஆம் ஆண்டும் சுவிட்ஸர்லாந்து நாட்டை சேர்ந்த கர்ல் எட்வேர்ட் கோர்னர் வெளியிட்டார்.
காட்தர்ட் பேஸ் சுரங்கம் என்று பெயரிடப்பட்ட இந்த சுரங்க வழி தொடரு பாதையின் நீளம் 57 கிலோமீட்டர்கள் ஆகும்.
இதற்கு முன்னதாக, ஜப்பான் நாட்டில் உள்ள செய்கன் என்ற சுரங்க வழி ரெயில் பாதை (53 கி.மீ) தான் உலகின் மிக நீளமான சுரங்க வழி ரயில் பாதையாக காணப்பட்டது.
அல்ப்ஸ் மலைத் தொடரில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், சூரிச் மற்றும் மிலன் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 40 நிமிடங்கள் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,400 பணியாளர்களை கொண்டு சுமார் 12 பில்லியன் பிராங்க் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை சுவிஸின் உறி மாகாணத்தில் உள்ள எர்ஸ்ட்பெல்ட் என்ற பகுதியில் தொடங்கி, டிசினோ மாகாணத்தில் உள்ள போடியோ என்ற பகுதியில் நிறைவடைகின்றது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதியான பிரான்சுவா ஹொலண்ட், இத்தாலி பிரதமரான மேட்டோ ரென்ஸி ஆகிய தலைவர்களுடன் சுவிஸ் நாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் பங்கேற்றனர்.
நேற்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கான சேவை அனைத்தும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.