முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காமம் மூன்று முறிப்பு பகுதியில் வீதியோரம் உள்ள குப்பைக்கு தீ வைத்த போது அதற்குள் இருந்த குண்டு ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது.
இச்சம்பவத்தில் துவிச்சக்கர வண்டியில் வீதியால் சென்ற ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்பப் பெண் ஒருவர் தலையிலும் கண் பகுதியிலும் குண்டு சிதறல்களின் தாக்கத்திற்குட்பட்ட நிலையில் பொது மக்களினால் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படிசம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பனங்காமம் மூன்று முறிப்பு சந்திப்பகுதியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்திற்கு எதிர்ப்பக்கமாக 50 மீற்றர் தூரத்தில் வீதி ஓரத்தில் இருந்த பாலை மரம் ஒன்றின் அடிப்பகுதிக்கு குப்பைகளினை போட்டு ஒருவர் தீயிட்டு கொண்டிருந்த போது குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது.
இதன்போது அவ் வீதி வழியாக சிறுவர் முன்பள்ளியில் தனது பிள்ளையினை விட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பனங்காமம் மூன்று முறிப்பைச் சேர்ந்த சுபாஸ்கரன் பகீரதி (வயது 28) என்ற ஒரு பிள்ளையின் தாய் குண்டு சிதறல்களின் தாக்கத்திற்கு உட்பட்டுள் ளார்.
மேற்படி குண்டு வெடிப்பு இடம் பெற்ற பகுதியில் வன்னி இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரின் காவலரண் ஒன்று நீண்ட நாட்களாக அவ்விடத்தில் இயங்கிய நிலையில் பின்னர் காவலரண் அகற்றப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேற்படி வெடிப்புச் சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (செ-15)