மலையக மக்களுக்கு வன்னியில் இடம் கொடுங்கள்:வலம்புரி!

0
426

10191மலையகத்தில் இடம்பெற்று வரும் மண் சரிவினால் ஏற்பட்டு வரும் சாவுகள் கண்டு கலங்காமல் இருந்து விட முடியாது. எங்கள் மலையக உறவுகள் படும் துன்பத்தை இலங்கை அரசு நீக்கவேண்டுமாயினும் அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் நடப்பதாக இல்லை.

மண்சரிவு என்ற பயங்கரத்தோடு போராடி வாழ்வதென்பது சாதாரண விடயமல்ல. எந்த நேரமும் மண்ணுக்குள் புதையுண்டு போகலாம் என்ற வாழ்க்கை எத்துணை அச்சமானது; ஆபத்தானது.

இருந்தும் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்கள் என்று அடையாளம் காணப்பட்ட பிரதேசத்து மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவதே அவர்களின் பாதுகாப்புக்கான ஒரே வழியாகும்.
இருந்தும் அத்தகைய நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசு முன்னெடுப்பதாகவோ, மலையக தமிழ் அரசியல் தலைவர்கள் எடுப்பதாகவோ தெரியவில்லை.

இந்நிலையில் தமிழ் மக்களாகிய நாம் எங்கள் மலையக சகோதரர்களுக்கு கைகொடுத்து உதவ வேண்டும்.
எனவே, வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள அரச காணிகளை வழங்கி அங்கு மலையக மக்களை குடியமர்த்த வேண்டும்.

வன்னியில் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்கள் என்று கோ­சம் போடும் நாம் அதற்கு மாற்றீடாக எங்கள் மலையக சகோதரர்களைக் குடியிருத்துவது நல்லது என்பதால் இது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

மலையகத் தமிழ் சகோதரர்களை வன்னிப் பெரு நிலப்பரப்பில் குடியமர்த்துவதன் மூலம் வன்னிப்பெரு நிலப்பரப்பில் விவசாய உற்பத்திகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுவதுடன் வட பகுதியில் தமிழ் குடித்தொகையும் அதிகரிக்கக் கூடியதாக இருக்கும்.

மலையக மக்களை வன்னியில் குடியிருத்துவது பொருத்தமில்லை என்று யாரேனும் கருதினால், அது மிகப்பெரும் தவறாகும்.
ஏனெனில் மண்சரிவு ஏற்படக் கூடிய இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு இலங்கை அரசு ஒருபோதும் பாதுகாப்பான இடங்களை வழங்கப் போவதில்லை.

மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுவது, மண்சரிவு ஏற்பட்டால் முடிந்தளவு சடலங்களை மீட்க நடவடிக்கை எடுப்பதென்பதோடு அரசின் கடமை நின்று போகும்.
இந்நிலையில் தமிழ் மக்களின் உரிமை என்று பேசும் எமக்கு எங்கள் மலையக சகோதரர்களின் உயிரைப் பாதுகாக்கின்ற தார்மீகக் கடமையும் உண்டு.

இது தவிர மலையக மக்களை வன்னியில் குடியிருத்துவதன் மூலம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதற்கு மேலாக, விவசாய உற்பத்தி, வேலைவாய்ப்புக்கான மனித வளம் அதிலும் எங்களிடம் இல்லாத அளவில் மலையக மக்களிடம் இருக்கக்கூடிய தொழில் திறன் என்பவற்றையும் வடபுலம் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.

இது தவிர மலையக மக்களை வன்னியில் குடியிருத்துவதன் மூலம் தமிழர் தாயகமும் மலையகமும் இணையக்கூடியதான உறவுப்பாலம் கட்டி எழுப்பப்படும்.

எனவே மண்சரிவு அபாயம் உள்ள மலையக மக்களுக்கு வன்னியில் காணி கொடுத்து அவர்களை இங்கு குடியமர்த்துங்கள். அங்கு ஏற்பட்ட மண்சரிவு இங்கு மண்ணின் பலத்தை அதிகரிக்கட்டும்.
(வலம்புரி ஆசிரிய தலையங்கம் 31.05.2016)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here