கடந்த சில நாட்களில் ஏற்பட்ட 3 படகு விபத்துகளில் சிக்கி 700க்கும் மேற்பட்ட அகதிகள் மத்திய தரைக் கடலில் மூழ்கி பலியாகியிருக்கக்கூடும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில் இருந்து ஏராளமானோர் கடத்தல் படகுகள் மூலம் சட்டவிரோதமாக ஐரோப்பாவில் குடியேற செல்கிறார்கள். படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றப்படுவதால் பல படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன.
அவ்வாறு அகதிகளை ஏற்றுக் கொண்டு கிளம்பிய படகுகளில் கடந்த சில நாட்களில் மட்டும் 3 படகுகள் இத்தாலி அருகே மத்திய தரைக் கடலில் கவிழ்ந்துள்ளன. இந்த விபத்துகளில் 700க்கும் மேற்பட்ட அகதிகள் பலியாகியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை கடலில் கவிழ்ந்த படகில் இருந்து 100 பேரை காணவில்லை. லிபியாவின் சப்ரதா துறைமுகத்தில் இருந்து 670 அகதிகளுடன் கிளம்பிய படகு ஒன்று கடந்த வியாழக்கிழமை காலை கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 550 பேர் மாயமாகியுள்ளனர்.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய தரைக்கடலில் மூழ்கிய படகில் இருந்து 135 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், 45 பேர் பிணமாக மீட்கப்பட்டனர், மேலும் பலரை காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.