வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதாக ஜனாதிபதி கூறியிருந்தாலும், இதுவரையில் அதற்கான சாத்தியக்கூறுகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் காணப்படவில்லை என சிறுவர்மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.
வடமாகாணத்தில் நீதியமைச்சின் கீழ் உள்ள மத்தியஸ்தர் சபைகள் (காணி) ஸ்தாபித்தல் மற்றும் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் காணிப்பிரச்சினை மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. இந்த காணிப்பிரச்சினையினால் எமது மக்கள் நலன்புரி நிலையங்களிலும், உற்றார்கள் உறவினர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றார்கள்.
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் உள்ள மக்களை எதிர்வரும் 6 மாத காலத்திற்குள் மீள்குடியேற்றம் செய்வதாக எமது ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன கூறியிருந்தார்.
எதிர்வரும் ஜுன் மாதம் நிறைவடைவதற்கு முன்னர் இந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். ஆனால், அவ்வாறான சாத்தியக்கூறுகள் நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்படுவதாக இல்லை. அந்த நடவடிக்கைகளை வெகு விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழ் மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண காணி அமைச்சும் நீதி அமைச்சும் அனுமதி வழங்கினால், மிகப்பெரிய வரப்பிரசாதம்.
தமது சொந்த காணிக்காக உரிமை கோரிய பலர் உயிரிழந்து விட்டார்கள். யார் உரிமை கோருவது என்ற பிரச்சினையும் அங்கு நிலவுகின்றது.
முன்னர் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் வலி.வடக்கில் உள்ள ஆலயங்களுக்கு பூசை வழிபாட்டிற்காக சென்று வந்திருக்கின்றறோம். ஆனால், பின்னர், அந்த இடத்திற்கு செல்ல முடியாதவாறு பாதைகள் பூட்டப்பட்டிருந்தன. 2015 ஆம் ஆண்டிற்கு பின்னர் சில ஆலயங்களுக்கு சென்று வருகின்றோம். அப்படியிருந்தும், வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய காசநோய் வைத்தியசாலை இதுவரையில் திறக்கப்படவில்லை. அந்த வைத்தியசாலை இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.
இவ்வாறான காணிப்பிரச்சினைக்கு எமது மத்தியஸ்தர் சபை மிக முக்கிய கவனம் செலுத்த வேண்டும். தமிழ் மக்கள் பாதிக்கக்கூடாது என்ற வகையில், கட்டாயம் எமது காணிப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு காணி அமைச்சும், நீதியமைச்சும் முன்வர வேண்டும்.
அத்துடன், இங்கு கலாசார சீரழிவுகளும் இடம்பெற்று வருகின்றன. எனத் தெரிவித்தார்.