காணாமல் போனோர் விவகாரமானது தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியிருக்கின்றனர். காணாமல் போன உறவுகள் உயிருடன் இருக்கின்றனரா அல்லது இல்லையா என்பது கூடத் தெரியாது இந்த மக்கள் பெரும் துன்ப, துயரங்களுடன் தமது வாழ்நாளை கழித்து வருகின்றனர்.
பிள்ளைகளை இழந்த தாய், தந்தையரும் கணவனை இழந்த மனைவியும் தந்தையை இழந்த பிள்ளைகளும் சகோதரனை இழந்த சகோதரிகளும் தமது உறவுகள் என்றோ ஒருநாள் மீள வருவார்கள் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் அவர்களை தேடிவருகின்றனர். ஆனால் காணாமல்போனோர் விவகாரத்திற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற விடயத்திற்கு இன்னமும் விடை காணமுடியவில்லை.
யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் காணாமல் போகச் செய்யப்பட்டனர். கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளைவேன்களில் பெருமளவானோர் கடத்திச்செல்லப்பட்டனர். யுத்தத்தின் போது சரணடைந்த முன்னாள் போராளிகள் பெருமளவானோர் காணாமல் போயினர். இவ்வாறு வெள்ளைவேன்களில் கடத்தப்பட்டவர்களும், யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டவர்கள் என பெருமளவானோருக்கு என்ன நடந்தது என்பதே தெரியாத விடயமாக உள்ளது.
காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி அவர்களது உறவினர்கள் கடந்த ஏழு வருடங்களாகவே போராட்டங்களை நடத்திவருகின்றனர். வடக்கு, கிழக்கு, தெற்கு என சகல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று விட்டன. கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குக்கூட தடைகள் போடப்பட்டன. இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் முன்னின்றவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.
ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது காணாமல்போனேரது உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு மன்றாடியிருந்தனர். கொழும்பில் காணாமல்போனோரது உறவினர்களது கூட்டத்தில் நவநீதம்பிள்ளை கலந்துகொண்டு அவர்களுக்கு ஆறுதலும் கூறியிருந்தார். இந்தக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்த காணாமல் போனோரது உறவினர்கள் வவுனியாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதேபோன்றே கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்துவதற்காக வவுனியாவிலிருந்து பஸ்ஸில் வந்த காணாமல்போனோரது உறவினர்களும் இடைநடுவில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். காணாமல் போன உறவினர்களது போராட்டங்களுக்கு முன்னைய அரசாங்கம் கட்டுப்பாடுகளை அல்லது தடைகளை விதித்துவந்தது. இதனால் உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி சுதந்திரமாகப் போராட்டம்கூட நடத்த முடியாத சூழல் அன்று நிலவியிருந்தது.
கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை அடுத்து நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இந்த நல்லாட்சி அரசாங்கத்திலாவது தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறியமுடியும் என்று காணாமல் போனோரது உறவினர்கள் நம்பிக்கைகொண்டிருந்தனர். புதிய அரசாங்கம் பதவியேற்று தற்போது ஒரு வருடத்துக்கு மேலாகின்ற போதிலும் இன்னமும் காணாமல்போனோரது விவகாரத்திற்கு தீர்வொன்று காணப்படவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் காணாமல்போனோர் விவகாரத்திற்கு உரிய தீர்வு காணப்படவேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு பொறுப்புக்கூறப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இதற்கான தீர்மானம் கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டபோது அதற்கு அரசாங்கமானது இணை அனுசரணை வழங்கியிருந்தது.
இதிலிருந்து யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்துவதற்கு அரசாங்கமானது உடன்பட்டிருந்தது. மனித உரிமை மீறல்களுக்குள் மக்கள் காணாமல் செய்யப்பட்ட விவகாரமும் அடங்கியிருக்கின்றது. எனவே இந்த விடயத்திற்கும் அரசாங்கமானது உடனடியாக தீர்வைக் காணவேண்டியுள்ளது.
தற்போதைய அரசாங்கமானது காணாமல்போனோர் விவகாரம் உட்பட மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என்று உறுதி வழங்கி வருகின்றபோதிலும், அதற்கான நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியிலேயே இடம்பெற்று வருகின்றன.
கடந்த அரசாங்க காலத்தில் காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டுமென்ற சர்வதேச அழுத்தம் வலுவடைந்திருந்தது. இதனையடுத்து காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவானது கடந்த சில வருடங்களாகவே காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றது.
வடக்கு, கிழக்கு, தெற்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இந்த ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான காணாமல் போனோரது உறவினர்கள் சாட்சியங்களை அளித்திருந்தனர். பெருமளவான மக்கள் படைத்தரப்பினரால் தமது உறவுகள் கடத்திச் செல்லப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தனர். இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தமக்கு விடையளிக்கப்படவேண்டுமென்றும் அந்த போராளிகளது உறவுகள் கோரிக்கை விடுத்திருந்தன. தமது கண்முன்னால் படையினரிடம் சரணடைந்த போராளிகள் காணாமல்போயுள்ளதாகவும், அவர்களை மீட்டுத்தருமாறும் இந்தமக்கள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தனர்.
எமது உறவுகள் உயிருடன் உள்ளனரா? அல்லது இல்லையா என்பதை அறிந்து கூறுமாறு காணாமல்போனோரது உறவுகள் அழுது புலம்பி சாட்சியங்கள் அளித்துள்ளன. ஆணைக்குழுவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் சாட்சியங்கள் அளித்துள்ளபோதிலும், இதுவரை எந்தவித விடிவும் அவர்களுக்கு ஏற்படவில்லை. வெறும் கண்துடைப்புக்காக ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுகின்றனவோ என்ற சந்தேகம் தற்போதும் காணாமல் போனோரது உறவினர்கள் மத்தியில் காணப்பட்டு வருகின்றது.
தற்போதைய நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அளித்த வாக்குறுதியின் படி காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிந்து அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக காணாமல்போனோர் குறித்த சுயாதீன பணியகம் ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கமானது தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தில் சட்டமொன்றின் மூலம் இந்தப் பணியகத்தை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த இந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது.
உண்மையிலேயே அரசாங்கத்தின் இந்த முயற்சியானது பாராட்டத்தக்கதாகும். இதேபோன்று அரசாங்கமானது மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் பொருட்டு உண்மைகளை கண்டறிவதற்காக நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணியொன்றினையும் கடந்த ஜனவரி மாதம் அமைத்திருந்தது. பாக்கியசோதி சரவணமுத்து தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவும் பொதுமக்களிடமிருந்து தகவல்களை கோரியிருக்கிறது. பொதுமக்கள் அடுத்த மாதம் 24 ஆம் திகதி வரை இந்த செயலணிக்கு தகவல்களை வழங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது இன்றியமையாததாகும். இந்த விடயத்தில் காணாமல் போனோர் விவகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும். உறவுகளை தொலைத்துவிட்டு அநாதரவாக நிற்கும் மக்களுக்கு விடையொன்று வழங்கப்படவேண்டும். எனவே இந்த விடயத்தில் அரசாங்கமானது பொறுப்புடன் செயற்பட்டு காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வுகாண முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
வீரகேசரி- ஆசிரிய தலையங்கம்