வடமாகாண சபை முன் சமூக சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

0
262

fffயாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சமூக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்து , வடமாகாண சபையின் முன்பாக  நேற்று வியாழக்கிழமை  ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு  நடைபெற்ற வேளையில் அங்கு வந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

‘வடமாகாணத்தில் 750 சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும் என வடமாகாண சுகாதார திணைக்களம் முன்னர் கூறியது. தொடர்ந்து 850 பேருக்கு வழங்கவேண்டியுள்ளது என்று கூறினர். அதன் பின்னர் 1,000 பேருக்கு மேல் வழங்கவேண்டியுள்ளதாக கூறுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் 350 பேர் இருக்கின்றோம். இதனைத்தவிர வடமாகாணத்தின் மிகுதி மாவட்டங்களையும் சேர்த்தால் 1000 என்ற தொகை வராது. எண்ணிக்கை எவ்வாறு கூடுகின்றது என்பது தெரியாமல் உள்ளது’ என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

‘ஏற்கெனவே 5 வருடம் தொடக்கம் 15 வருடங்கள் வரையில் கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனத்தை தராமல், ஏன் எண்ணிக்கையை கூட்டிச் செல்கின்றார்கள் என்று தெரியாது.

மத்திய அரசாங்கத்தால் 1,000 பேருக்கான நியமனம் தரப்பட்டால், எங்களுக்கான நியமனமும் வழங்கப்படும் என்கின்றனர். முதலில் எங்களுக்குத் தாருங்கள். அதன் பின்னர் புதியவர்கள் பற்றி சிந்தியுங்கள்’ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த முதலமைச்சர், இரண்டு கிழமைக்குள்  நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற  உறுதிமொழியை வழங்கினார். இதனையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here