வளமான எதிர்காலத்திற்கான இளைஞர் சக்தி எனும் தொனிப்பொருளில் இன்று கிளிநொச்சியில் இளைஞர் நடை பவனி ஒன்று நடைபெற்றது.
வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சும் கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவை மன்றமும் இணைந்து இந்த நடை பவனியை ஏற்பாடு செய்திருந்தன.
இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து ஆரம்பித்த இளைஞர் நடை பவனி, மது பாவனைக்கு எதிரான வாசகங்களை தாங்கியவாறு கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு சிறப்புரைகள் இடம்பெற்று முடிவடைந்தது.
இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிளை, கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவை மன்ற பொறுப்பதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் யுவதிகள், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை மாணவர்கள் , ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.