அதிபர் தரம் – 3 போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நியமனத்திற்காக தகுதி பெற்றுள்ள புதிய அதிபர்களுக்கான பயிற்சி வகுப்புகளில் விநியோகிக்கப்படும் வழிகாட்டல் குறிப்பேடுகள் மற்றும் கையேடுகள் ஆகியன தனிச்சிங்களத்திலேயே வழங்கப்பட்டு வருவதால் அதனை விளங்கிக் கொள்வதில் வடக்கு கிழக்கு தமிழ்மொழிமூல அதிபர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். இது கண்டனத்திற்குரியது என்று இலங்கைத் தமிழர்ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுமார் 4000 புதிய அதிபர்களுக்கான பயிற்சி செயலமர்வுகள் தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் நாட்டின் பலபாகங்களிலும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தின் புதிய அதிபர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையங்களில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள பயிற்சி நிலையங்களில் உள்ள ஒரு சில இடங்களில் கையேடுகள் தனிச்சிங்களத்திலேயே வழங்கப்பட்டு வருவதால் விளங்கிக்கொள்வதில் கஷ்டங்களை எதிர்நோக்குவதுடன் அதிபர் கல்வியை பெற்றுக்கொள்வதில் இடத்திற்கு இடம் வேறுபாடுகள் காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்மாந்துறை வலயத்திற்கான பயிற்சி இணைப்பாளர் சபுர்த்தம்பி இது பற்றிக் கூறுகையில்,
சுமார் 120 பக்கங்களைக்கொண்ட இரு சிங்கள கைநூல்கள் வந்துள்ளன.தமிழில் இல்லாதது பெருங்குறை. அதனை மொழிபெயர்க்க முயற்சித்தபோது ஒரு பக்கத்திற்கு 300 ரூபா கேட்கிறார்கள்.நாம் என்ன செய்வது? விரிவுரையாளர்கள் தமிழில் தயாரித்துவரும் குறிப்புகளை வைத்து நடத்தி வருகின்றோம் என்றார்.
தற்போதைய அரசின் புதிய அதிபர் சேவை பிரமாணக் குறிப்பின்படி 180 மணித்தியாலங்கள் கொண்ட 6வார பயிற்சி செயலமர்வுகளில் விடுமுறை பெற்றுக்கொள்ளாத பங்களிப்புடன் பயிற்சி அதிபர் கலந்து கொள்வதுடன் பயிற்சியின் இறுதியில் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் பரீட்சையிலும் பிரயோக செயற்பாட்டிலும் கலந்து கொண்டு சித்தியடைந்தால் மாத்திரமே அதிபர் சேவைக்குச் செல்ல முடியும் என்றும் அல்லாதோர் அவர்கள் முன்பிருந்த ஆசிரியர் சேவையிலேயே அமர்த்தப்படுவார்கள் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கல்வியமைச்சில் தமிழ்பிரிவுக்கென்று தனியான பிரிவுகளும் பணிப்பாளர்களும் கடமையாற்றும் நிலையிலும் தகுதி பெற்ற இந்த அதிபர்களுக்காக ஒருநாளைக்கு 500 ரூபா வீதம் ஒருவருக்காக ஒதுக்கியுள்ள நிலையிலும் இவ்வாறு சிங்கள மொழிகளிலேயே பாடக்குறிப்புக்களையும் கைப்பிரதிகளையும் வழங்குவதால் பாரபட்சம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மும்மொழிக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் பழைய அரசாங்கம் போலவே செயற்பட்டு வருவதாகவும் பாதிப்புக்குள்ளாகி வரும் புதிய அதிபர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Close