சுன்னாகம் பகுதியிலுள்ள பாதுகாப்பான தொடருந்து கடவையில் இன்று தொடருந்து மோதி வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார்.
பலியான பெண் 70 வயது மதிக்கத்தக்கவர் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடருந்து வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த போதும் , இந்த வயோதிப பெண், கடவையின் கீழாக குனிந்து ரயில் பாதையைக் கடக்க முற்பட்டபோதே கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடருந்து மோதியுள்ளது.
உயிரிழந்தவர், இன்னமும் அடையாளங் காணப்படவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுன்னாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை,
உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீட்டில் கணவருடன் தனியாக வாழ்ந்து வந்த வயோதிபப் பெண் இனம் தெரியாத நபரினால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இரவு இடம்பெற்றுள்ளது.
உடுப்பிட்டி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சுப்பிரமணியம் அசுபதி என்ற வயோதிபப் பெண்ணே இனம் தெரியாத நபரினால் கழுத்து வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு உணவை உண்ட பின் கைகழுவச் சென்ற வேளை பின்னால் வந்த இனந்தெரியாத நபரினால் இவரின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் பிள்ளைகள், வெளிநாட்டில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைப் மேற்கொண்டு வருகின்றனர்.