ஐ.எஸ்.குழுவிடம் இருந்து பலூஜா நகரை மீட்கும் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி அறிவித்துள்ளார்.
“பலூஜாவை விடுவிக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. பாரிய வெற்றி ஒன்றுக்கான தருணம் நெருங்கிவிட்டது. ஐ.எஸ்ஸுக்கு தப்பி ஓடுவதை தவிர வேறு வழி இல்லை” என்று அவர் கடந்த ஞாயிறன்று அறிவித்தார்.
நகரில் இருந்து பொதுமக்களுக்கு தப்பி வெளியேறும்படி ஈராக் இராணுவம் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
2014இல் ஐ.எஸ்ஸிடம் வீழ்ந்த முதல் நகர் பலூஜா என்பதோடு தற்போது அந்த குழு ஈராக்கில் பலம்கொண்டிருக்கும் இரு நகரங்களில் ஒன்றாகவும் அது உள்ளது. நகரை விட்டு வெளியேற முடியாத மக்கள் தமது வீடுகளுக்கு மேல் வெள்ளை கொடிகளை ஏற்றும்படி ஈராக் இராணுவம் அரச தொலைக்காட்சி ஊடே தெரிவித்துள்ளது.
தலைநகர் பக்தாதில் இருந்து மேற்காக 65 கிலோமீற்றர் தொலை வில் இருக்கும் இந்த நகரை இராணுவம், பொலிஸ் மற்றும் அரச ஆதரவு ஷியா போராளிகள் சுற்றிவளைத்துள்ளனர்.
பக்தாதை தளமாகக் கொண்டு இயங்கும் குர்திஷ் ஆதரவு செய்தித் தளம் வெளியிட்டிருக்கும் செய்தியில், குறித்த தாக்குதலுக்காக பலூஜா புறநகர் பகுதியை 20,000 பொலிஸ் துருப்பினர் நெருங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பலூஜா நகரில் தொடர்ந்து 60,000 முதல் 90,000 வரை குடும்பங்கள் இருப்பதாகவும் இதில் ஐ.எஸ். போராளிகளின் குடும்பத்தினரும் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஜுனில் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்த ஐ.எஸ். குழு ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கணிசமான நிலத்தை கைப்பற்றியபோதும் பாதுகாப்பு படையினர் மற்றும் அதற்கு ஆதரவான போராளிகள் அண்மைக்காலத்தில் ஐ.எஸ். குழுவை பாரிய அளவில் பின்வாங்கச் செய்துள்ளனர்.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை ஒன்றும் ஐ.எஸ்ஸுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஈராக் இராணுவம் கடந்த டிசம்பரில் அருகாமை நகரான ரமடியை ஐ.எஸ்ஸிடம் இருந்து மீட்டது.
ஐ.எஸ். பலூஜாவை இழக்கும் பட்சத்தில் அந்த குழுவுக்கு ஈராக்கில் ஒரே கோட்டையாக நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மொசூல் மாத்திரம் எஞ்சிவிடும். எனினும் அண்டை நாடான சிரியாவில் அந்த குழு தொடர்ந்து கணிசமான நிலத்தை தக்கவைத்துக் கொண்டபோதும் அண்மைக் காலத்தில் அங்கும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
பலூஜா நகரில் இருக்கும் குடியிருப்பாளர்கள் பட்டினி பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் குறித்து ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்த நகருக்கான விநியோகப்பாதையை முடக்கிய அரச படை நகரை கைப்பற்ற முயற்சிப்பதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது. மறுபுறம் மக்கள் நகரை விட்டு வெளியேறுவதை ஐ.எஸ். தடுத்து வருகிறது.
ஈராக்கிய சுன்னி முஸ்லிம்களின் பிரதான நகராக பார்க்கப்படும் பலூஜா நகர் 2004 அமெரிக்க படையெடுப்பில் அதிக சேதத்திற்கு உள்ளானது.
Email Facebook Twitter Google+ Pinterest PrintFriendly Share