தமிழக மக்கள் தங்களுக்கு மீளவும் வழங்கிய ஆணை என்பது தமிழகப் பிரச்சனைகளை கையாள்வதற்கான ஆணை மட்டுமன்றி ஈழத்தமிழ்மக்களுடைய தேசிய இனப்பிரச்சினையின்பால் தாங்கள் காட்டிய உறுதியான ஆதரவிற்கு அவர்கள் வழங்கிய அங்கீகாரமே தங்களின் வெற்றிக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஆறாவது தடவையாக மீண்டும் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பெருமைக்குரிய உங்களது தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஈட்டிய பாரிய வெற்றிக்கு முதற்கண் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.முன்னை நாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனுக்குப் பின்னர் தாங்கள் பெற்ற தொடர் வெற்றியானது உங்களது ஆளுமை மிக்க தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கிறது. ஈழத்தமிழர்களாகிய நாம் தாங்கள் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக்கொள்வதை எதிர்பார்ப்புக்களுடனும் நம்பிக்கையுடனும் வரவேற்று நிற்கின்றோம்.தங்களது கடந்த ஆட்சிக்காலத்தில் ஈழமக்களின் விடுதலைக்காக தாங்கள் தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய துணிச்சலானதும் அறிவுபூர்வமானதுமான தீர்மானங்களையிட்டு நாம் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.
தமிழக மக்கள் தங்களுக்கு மீளவும் வழங்கிய ஆணை என்பது தமிழகப் பிரச்சினைகளை கையாள்வதற்கான ஆணை மட்டுமன்றி ஈழத்தமிழ்மக்களுடைய தேசிய இனப்பிரச்சினையின்பால் தாங்கள் காட்டிய உறுதியான ஆதரவிற்கு அவர்கள் வழங்கிய அங்கீகாரமுமாகும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.
இங்கு தமிழ்மக்களின் தனித்துவம் என்பதும் இருப்பு என்பதும் இலங்கை அரசால் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டு வருகின்றது.எமது மக்களின் வாழ்க்கை என்பது தொடர்ந்தும் அதிகரித்துவரும் அடக்குமுறைகளுக்கும் அல்லல்களுக்கும் உட்பட்டே இருந்து வருகின்றது. நாம் ஓர் தனித்தேசிய இனமாக தமக்கான நீதியினையும் நிலைத்திருக்கக்கூடிய தீர்வையும் பெற்று வாழ்வதற்கு தமது சர்வதேச நட்பு சக்திகளின் ஆதரவை நாடி நிற்கின்றனர்.
தமிழ்மக்கள் தமது சொந்த ஆட்சியை நிறுவிக்கொள்வதற்கு ஆவன செய்வதாக தாங்கள் வழங்கிய உறுதிப்பாட்டை நாம் மகிழ்வுடன் வரவேற்கும் அதேநேரம் தாங்கள் தமிழ்மக்களை விடுவிப்பதற்கான போராட்டத்திற்கு தொடர்ந்தும் காத்திரமான பங்களிப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
எமது கட்சியின் சார்பாகவும் எமது மக்கள் சார்பாகவும் தங்களின் பிரமாண்டமான வெற்றிக்காக மீண்டுமொருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரி-வித்துக்-கொள்கின்-றேன். தாங்கள் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழப் பிரார்-த்திக் கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளது.