கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சில தொழில்சார் நிபுணர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் தென்பகுதி மக்களுக்கு நேர்ந்த இயற்கைப் பேரிடர் அழிவுகுறித்தும் அதற்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தும் 16.05.2016 அன்று கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலின் முடிவில் கிளிநொச்சி மாவட்டத்தின் சகல அரச திணைக்கள மற்றும் தனியார் துறையினரிடமும் மக்களிடமும் நிவாரணப் பொருட்களைச் சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.
மறுநாள் 17.05.2016 அன்று கேகாலை, அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மாபெரும் மனித அவலம் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைக்கப்பெற்றதுடன், இவ்விடரானது 350,000க்கும் மேற்பட்ட மக்களை இடம்பெயர வைத்துள்ளதுடன் பலர் இறந்தும் பலர் காணாமல்போனது குறித்தும் அறிந்துகொண்ட கிளிநொச்சி வாழ் மக்கள் தமது ஆதரவினை எவ்வாறெனினும் பாதிக்கப்பட்ட தமது தென்னிலங்கை சகோதர சகோதரிகளுக்கு வழங்குவதற்கு உறுதியாக முடிவெடுத்தனர்.
இந்த நிலையில், தொழில்சார் நிபுணர்கள் தமது அனர்த்த நிவாரணத் திட்டத்தினை முன்வைத்தபோது அது அனைத்துத் துறையினரதும் அனைத்து மக்களதும் ஆதரவினைப் பெற்றுக்கொண்டது. அனேக கிளிநொச்சி வாழ் மக்கள் இந்த இயற்கைப்பேரிடரினைத் தாம் 2009ஆம் ஆண்டில் நேர்கொண்ட மனிதப்பேரவல இடப்பெயர்வுடன் ஒப்பிட்டுக்கொண்டதுடன், அவ்வாறு தாம் இடம்பெயர்ந்திருந்த வேளையில் ஓடிவந்து உதவிசெய்த தென்பகுதிச் சொந்தங்களுக்குக் கைமாறுசெய்யும் வேளை இதுவே எனப் பேசிக்கொண்டனர்.
ஏறத்தாழ கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து அரசநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனியார்துறையினர் உடனடியாகவே இந்த அனர்த்த நிவாரணத் திட்டத்திற்குத் தமது பங்களிப்புகளை வழங்க இணக்கம் தெரிவித்தனர்.
18.05.2016 அன்று இந்த அனர்த்த நிவாரணத் திட்டத்திற்கு அனுசரணை வழங்குபவர்களாக கிளிநொச்சி நகர றோட்டரிக் கழகத்தினர் தெரிவுசெய்யப்பட்டனர். கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் எந்திரி சுதாகரன் இந்த அனர்த்த நிவாரணத்திட்டத்தின் பிரதம ஒருங்கிணைப்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
19.05.2016 அன்று எந்திரி சுதாகரன் குழுவினர் கேகாலை மாவட்ட அரச அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணியகப் பிரதிப் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடி கேகாலை மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் நிவாரணப் பொருட்களின் பட்டியலைப் பெற்றுக்கொண்டனர்.
மேற்படி அவசரமாகத் தேவைப்படும் நிவாரணப் பொருட்களின் பட்டியலின் அடிப்படையில் தேவையான நிதியின் பெறுமதி கணக்கீடு செய்யப்பட்டு 21.05.2016 மாலைக்கு முன்னதாக 500,000 ரூபா திரட்டுவதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. திரட்டப்படும் பொருட்களை கேகாலைக்கு எடுத்துச்சென்று கையளிக்கும் தினமாக 22.05.2016 நிர்ணயிக்கப்பட்டது.
கீழ்க்காணும் அமைப்புக்கள் இந்த அரியபணிக்குத் தமது பங்களிப்புகளை வழங்க உடனடியாகவே இணக்கம் தெரிவித்தன.
அரச அதிபர் செயலகம் கிளிநொச்சி, கரைச்சி உதவி அரச அதிபர் அலுவலகம், வலயக் கல்விப்பணிமனை கிளிநொச்சி, நீர்ப்பாசனத் திணைக்களம் கிளிநொச்சி வலயம், நீர்ப்பாசனத் திணைக்களம் கிளிநொச்சி, நீர்ப்பாசனத் திணைக்களம் யாழ்ப்பாணம், சுகாதாரத் திணைக்களம் கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபை, கட்டடங்கள் திணைக்களம் கிளிநொச்சி, வீதிஅபிவிருத்தி அதிகாரசபை கிளிநொச்சி, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பணிமனை கிளிநொச்சி, விவசாயத் திணைக்களம் கிளிநொச்சி, கிளிநொச்சி விவசாய விதை ஆராய்ச்சி மையம், கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி மையம், கிளிநொச்சி விவசாய விரிவாக்க அலுவலகம், கிளிநொச்சி விலங்கு உற்பத்தித் திணைக்களம்,தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கிளிநொச்சி, ஸ்ரீலங்கா டெலிகொம் கிளிநொச்சி, தேசிய தொழிற்பயிற்சி நிறுவகம் கிளிநொச்சி, மக்கள் வங்கி கிளிநொச்சி, சம்பத் வங்கி கிளிநொச்சி, இலங்கை வங்கி பரந்தன், இலங்கை வங்கி கிளிநொச்சி, தேசிய சேமிப்பு வங்கி கிளிநொச்சி, சிலிங்கோ காப்புறுதி கிளிநொச்சி, செலான் வங்கி கிளிநொச்சி, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஹற்றன் நஷனல் வங்கி கிளிநொச்சி, சனச அபிவிருத்தி வங்கிகிளிநொச்சி மற்றும் கிளிநொச்சி நகர றோட்டறிக்கழகம்.
மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்றியல் நிபுணர் வைத்தியர் ந.சரவணபவன் அனைவருக்கும் முன்னுதாரணமாகச் செயற்பட்டு சுகாதாரத்துறை ஊழியர்கள் மத்தியில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டமை அனைவராலும் பாராட்டப்பட்டது.
கீழ்க்காணும் சுகாதாரத்துறை நிறுவனங்களது ஊழியர்கள் தமது பங்களிப்பினை உடனடியாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
முழங்காவில் ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் 21,000 ரூபா, பூநகரி சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையின் ஊழியர்கள் 22,000 ரூபா, வேரவில் பிரதேச வைத்திய சாலையின் ஊழியர்கள் 9,000 ரூபா, கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஊழியர்கள் 27,500 ரூபா, தருமபுரம் பிரதேச வைத்தியசாலையின் ஊழியர்கள் 1,600 ரூபா, அக்கராயன் பிரதேச வைத்தியசாலையின் ஊழியர்கள் 10,000 ரூபா, மாவட்டப் பொது வைத்தியசாலை கிளிநொச்சியின் ஊழியர்கள் 55,000 ரூபா, மொத்தம் 146,600 ரூபா சுகாதாரத்துறை சார்ந்த பணியாளர்களால் வழங்கப்பட்டது.
சேகரிக்கப்பட்ட பொருட்களைக் கேகாலைக்குக் கொண்டுசெல்வதற்கு வடமாகாண விவசாய அமைச்சு பாரஊர்தி ஒன்றினை வழங்கி உதவியுள்ளது. அனைத்து நிவாரணப்பொருட்களும் 21.05.2016 அன்று மாலையில் பார ஊர்தியில் ஏற்றப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை (22.05.2016) 3 மணியளவில் பாரஊர்தி கேகாலை நோக்கிப் புறப்பட்டது. கேகாலை அரச அதிபரிடம் இந் நிவாரணப் பொருட்கள் நேற்று கையளிக்கப்பட்டன.
அதேவேளை, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் விடுத்த அவசர வேண்டுகோளையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட தட்டுவன்கொட்டிப் பகுதியிலுள்ள மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் நேற்று முன்தினம் (21.05.2016) மாலை வழங்கிவைக்கப்பட்டன.
இந்த இடத்தில் கிளிநொச்சி மாவட்டமானது 30 வருடகாலமாக நடைபெற்ற யுத்தத்தில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பதுடன் 2009ஆம் ஆண்டு முற்றாக இடம்பெயர்ந்து பின்னர் மீளக் குடியேறிய ஓர் மாவட்டம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் கிளிநொச்சி மாவட்டமானது இன்னமும் இலங்கையின் மிக வறிய மாவட்டங்களில் ஒன்றாகும்.
வேரவில், முழங்காவில், அக்கராயன்குளம் மற்றும் பூநகரி ஆகிய கிராமங்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் தொலைதூரத்தில் அமைந்துள்ள பின்தங்கிய மிக வறிய கிாமங்களாகும். இருப்பினும் இந்த வறிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் தென்னிலங்கைச் சகோதர சகோதரிகளுக்காக தமது சிரமங்களையும் பொருட்படுத்தாது பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். இது தமிழ்ச் சமூகமானது எத்துணை இடர்கள் துன்பங்களை அனுபவித்தாலும், எப்பொழுதும் தமது சிங்களச் சகோதரர்களுக்கு உதவுவதற்குப் பின்னிற்காது என்பதையே காட்டி நிற்கிறது.
இந்த நிவாரணத் திட்டத்தினை முன் மொழிந்த கிளிநொச்சியின் தொழில்சார் நிபுணர்கள், தலைமைத்துவத்தினை வழங்கும் எந்திரி சுதாகரன், மகப்பேற்றியல் நிபுணர் சரவணபவன் போன்றோர் மற்றும் நன்கொடையளித்த அனைத்துக் கொடையாளிகளுக்கும் இந்த உயரிய பணியினை மேற்கொள்வதற்கான உரிய கௌரவம் வழங்கப்படவேண்டும்.
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னுதாரணத்தினையடுத்து தற்போது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச அதிபர்கள் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஆகியோர் தென்பகுதிச் மக்களது துயர்துடைக்கும் உன்னத பணியில் இறங்கியுள்ளனர்.