ஆறாவது முறையாக தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று திங்கள்கிழமை பதவியேற்கிறார். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் கே.ரோசய்யா செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி, பி.தங்கமணி, திண்டுக்கல் சி.சீனிவாசன் உள்பட 28 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். இதையடுத்து, தலைமைச் செயலகம் செல்லும் முதல்வர் ஜெயலலிதா, அங்கு முக்கிய திட்டங்கள் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
15-வது சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கவுள்ளது. முதல்வர்
ஜெயலலிதாவுடன், 28 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளது.
விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன. கடற்கரை சாலை முழுவதும் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்வரை வரவேற்க பொது மக்கள் அதிகளவு கூடுவார்கள் என்பதால், சாலையோரங்களில் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சர்கள்: விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும் பங்கேற்பர் எனத் தெரிகிறது.
பணிகளும் இன்றே தொடக்கம்: பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து அவர் தலைமைச் செயலகம் சென்று தனது பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி புதிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திடுகிறார் என்றும், அமைச்சர்களும் தங்களது பொறுப்புகளை ஏற்றுகொண்டு பணிகளைத் தொடங்க உள்ளனர் என்றும் அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதன் பின்னர், முதல்வர் ஜெயலலிதா ஆளுநர் மாளிகைக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு, சட்டப் பேரவையின் தாற்காலிகத் தலைவராக செம்மலை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது. அதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
ஆறாவது முறையாக முதல்வராகிறார்:
முதலாவது சட்டப் பேரவை அமைந்த காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சியின் காமராஜர் 2 முறையும், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். 3 முறையும், திமுக தலைவர் கருணாநிதி 5 முறையும் முதல்வர்களாக இருந்துள்ளனர். ஆறாவது முறையாகப் பதவியேற்கும் முதல் முதல்வர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றுள்ளார்.
விழாக்கோலம்:
விழா நடைபெறவுள்ள சென்னை பல்கலைக்கழக வளாகமும், கடற்கரை சாலையும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஜெயலலிதாவை வாழ்த்தி வரவேற்புப் பதாகைகளும், அதிமுக கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்களும், கட்சித் தொண்டர்களும் சென்னைக்கு வந்துள்ளனர். தலைமைச் செயலகம் வரவுள்ள ஜெயலலிதாவுக்கு ஊழியர்கள், பணியாளர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும், தலைமைச் செயலக வளாகத்திலும் முதல்வரை வரவேற்று பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இதே நாளில்…
ஐந்தாவது முறை முதல்வராக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா 2015 மே 23-இல் பதவியேற்றார்.
சொத்து குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதையடுத்து, 2015-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி, ஜெயலலிதா ஐந்தாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.
இந்தாண்டு தேர்தலில் வெற்றி பெற்று அதே நாளில் (மே 23) ஆறாவது முறையாக முதல்வராகப் பதவியேற்கிறார்.
கடந்த ஆண்டும் பதவியேற்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.
அப்போதும் ஜெயலலிதாவுடன் 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். இப்போதும் 28 பேர் பதவியேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள்,பெண்களுக்கான நலத் திட்டங்கள்…
அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குழந்தைகள்-பெண்களுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமையே கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, தலைமைச் செயலகம் வரும் அவர் தனது பணிகளைத் தொடங்குகிறார். இதைத் தொடர்ந்து, தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்குதல், மகளிருக்கு மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் அவர் கையெழுத்திடுவார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டரை மாதங்கள் கழித்து தலைமைச் செயலகத்துக்கு வரும் முதல்வர்: சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அறிவிக்கை மார்ச் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. முன்னதாக, பிப்ரவரி மாதம் தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்திருந்தார். சட்டப் பேரவை கூட்டத் தொடர் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பங்கேற்றார்.
இந்த நிலையில், இரண்டரை மாதங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் தலைமைச் செயலகம் வருகிறார்.
இதற்காக அவரது அறை, தலைமைச் செயலக வளாகம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்தும் பணியை பொதுப்பணித் துறை ஊழியர்கள் கடந்த சில நாள்களாக இரவு-பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.