ஏழாவது ஆண்டிலும் தடம் பதித்து தடம் மாறாது தொடர்கிறது தமிழின அழிப்பு ! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

0
234

icet_logoமனிதநேயம் பேசும் உலக நாடுகளின் மேற்பார்வையில் இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் துணையுடன் சிங்கள பௌத்த பேரினவாத அரசால் நடத்தி முடிக்கப்பட்ட தமிழினப் படுகொலையின் போது முள்ளிவாய்க்காலில் தமிழர் உடல்கிழிந்து வடிந்தோடிய குருதியானது உலகத்தமிழர் மனங்களில் இன்றும் ஈரமாகவே உள்ளது.

சிங்களம் மட்டும் சட்டத்தின் நடைமுறையுடன் 1956 ஜூன் 05 ஆம் திகதி இங்கினியாகலையில் 150 தமிழர்களின் உயிர்ப்பறிப்புடன் ஆரம்பித்துவைக்கப்பட்ட தமிழினப்படுகொலையானது 2009 மே 18 அன்று லட்சம் ஈழத்தமிழர்  உயிர்குடித்து உச்சம் தொட்டது.

இங்கினியாகலை இனப்படுகொலையின் போது அடித்து கொல்லப்பட்டவர்களும் காயங்களுடன் இருந்தவர்களும் எரியும் நெருப்பில் சிங்களக் காடையர்களால் தூக்கி வீசப்பட்டார்கள். அவ்வாறே முள்ளிவாய்காலிலும் கொல்லப்பட்டவர்களுடன் காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களுமாக பல பத்தாயிரம் தமிழர்கள் சிங்கள கொலைவெறிப்படைகளால் குழிதோண்டிப் புதைக்கப்பட்டார்கள்.

இவ்வாறு சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலைக்கு பலியான உறவுகளுக்கு இன்றுவரை நீதிகிடைக்காத நிலையுடன் அவர்களை நினைத்து விழிநீர் சொரிந்து நினைவேந்தல் செய்யும் உரிமையும் மறுக்கப்பட்ட கையறுநிலையில்தான் தாயகத்தில் உள்ள எமது மக்கள் உள்ளார்கள்.

‘சமாதானத்திற்கான போர்’ என்ற போர்வையில் தமிழர் தாயகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆக்கிரமிப்புப்போரானது முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்புடன் முடிவுக்கு வந்தபோதிலும் தமிழர்கள் மீதான இனவழிப்பானது பல்வேறு வடிவங்களில் இன்றும் தொடர்ந்து வருகின்றது.

போர்க்காலத்தில் தமிழர் தாயகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இனவழிப்பு இராணுவம் மேலதிக அதிகரிப்புடன் இன்றும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடாக வெள்ளைவான் கடத்தல்கள், பொய்க்குற்றச்சாடின் கீழான கைதுகள் மூலம் தமிழர்கள் மீதான இராணுவ அச்சுறுத்தல் நிலை தொடர்ந்தும் உயிரூட்டப்பட்டு வருகின்றது.

உயர்பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் இராணுவப்பிடிக்குள் விழுங்கப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் தமிழர் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பும் தொடர்கின்றது. இதன் மூலம் தமிழர் தாயகத்தின் பொருண்மிய வளம் சிதைக்கப்பட்டு தமிழர் வாழ்வில் திட்டமிட்ட வறட்சிநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பெயரால் பல ஆண்டுகளாக நீதி விசாரணைகள் மறுக்கப்பட்டு சிறைக்கூடங்களுக்குள் முடமாக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் தொடர்ந்தும் இருண்டதாகவே தொடர்கின்றது. அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாட்டின் ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் ஆகியோர் வழங்கும் வாக்குறுதிகள் அனைத்தும் வழக்கம்போலவே காற்றில் கரைந்துவிடுகிறது.

இது போதாதென்று தமிழர் வாழ்வியலின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் கலாச்சாரம், பண்பாடுகளை சிதைக்கும் நடவடிக்கைகளும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றது. வடக்கில் ஐந்து பேருக்கு ஒரு இராணுவம் என்றளவில் சிங்கள இராணுவத்தின் ஆதிக்கம் வியாபித்துள்ள நிலையிலும், வாள்வெட்டு, குழுச்சண்டை, தெருச்சண்டை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தடையற்ற போதைப்பொருள் பயன்பாடு, விபச்சாரம் போன்ற சமூகவிரோத செயற்பாடுகள் தொடர்வதானது இதன் வெளிப்பாடேயாகும்.

2009 மே 18 இற்கு முன்னர் இதுபோன்ற  சமூகவிரோத செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில் மருந்தளவிற்கும் இல்லாதிருந்தது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியில் செயற்பட்டு வந்த காலங்களில் கூட யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் இவ்வாறான சமூகவிரோத செயற்பாடுகள் நடந்ததில்லை. அவ்வாறு இருக்கையில் இன்று அதீத வளர்ச்சி நிலைபெற்றிருக்கும் இச் சமுகவிரோத செயற்பாடுகளின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது வெட்டவெளிச்சமாகிறது.

நூற்றாண்டு கண்டிராத இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு ஏழாண்டுகள் முடிவிலும் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழ் இனவழிப்பானது வெவ்வேறு வடிவங்களில் தமிழர் தாயகத்தில் தொடர்வதன் மூலம் திட்டமிட்ட தமிழினப் படுகொலையின் தடம் பதித்து தடம் மாறாது தற்போதைய நல்லாட்சி அரசும் தொடர்ந்து வருவதையே நிரூபிக்கின்றது.

இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற நாள் முதல் கடந்த 68 ஆண்டுகளாகத் தொடரும் சிங்கள தேசத்து ஆட்சியாளர்களின் இப்போக்கானது தனித்தான இறையாண்மை மிக்கவர்களாக தம்மைத் தாமே ஆட்சி செய்யும் உரிமை பெற்றவர்களாக தமிழர்கள் மீழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கே எம்மை இட்டுச்செல்கின்றது.

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்தான அரசியல் போராட்டமாகட்டும் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப் போராட்டமாகட்டும் இதன் வெளிப்பாடாகவே தோற்றம் பெற்று வளர்ச்சிகண்டிருந்தது. அதன் நீட்சியான தற்போதைய இராசதந்திர வழிமுறைதழுவிய அரசியல் போராட்டமும் வரலாற்று தன்னியல்பில் தீர்மாணிக்கப்பட்டு எமது கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ தாயகத்து மண்ணோடு மண்ணாகவும், கடலோடு கடலாகவும், காற்றோடு காற்றாகவும் இரண்டறக்கலந்துவிட்ட எம் உறவுகளின் நினைவுகளை நெஞ்சில் தாங்கி அவர்களின் கனவுகளை எண்ணங்களில் சுமந்து இனத்தின் விடுதலைக்கான பணியை மலைபோல் இடர்வரினும் முன்னெடுப்போம் என்று உறுதியேற்போம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here