வன்னிப் பெரு நிலப்பரப்பில் கொன்றொழிக்கப்பட்ட எம் உயிரினும் மேலான உறவுகளே! வாழ வேண்டிய உங்களைச் சாகடித்த கொடூரம் எங்கள் இதயங்களை இன்னமும் கருகிக்கொண்டே இருக்கின்றது.
பெரும்பான்மை இனத்தின் குருதிப்பசிக்கு நீங்கள் பலியாகிப் போனீர்கள். இந்த உலகம் உங்கள் மீது மனித நேயத்தைக் காட்டியிருந்தால் இன்று நீங்களும் எங்களோடு வாழ்ந்திருப்பீர்கள்.
என்ன செய்வது? உங்களை இழந்து நாங்கள் கண்ணீர்விட்டுக் கருகிப் போவதுதான் விதி என்றாயிற்று.
முப்பது ஆண்டுகால போராட்டம். இதற்காக நாம் அனுபவித்த துன்பங்கள், இழந்து போன மனித உறவுகள் கொஞ்சமல்ல. இருந்தும் ஈனப்பிறப்புக்கள் இன்னமும் உங்களின் உயிரிழப்புகள் பற்றியோ, எங்களின் அவலங்கள் பற்றியோ கரிசனை கொண்டதாகத் தெரியவில்லை.
கெளதம புத்தபிரானின் போதனைகளைப் பின் பற்றுவதாக கூறும் மக்களால் – ஆட்சியாளர்களால் மனிதத்தை மனிதமாகப் பார்க்க முடியவில்லை.
தமிழினம் என்றாலே அவர்களுக்கு இயல்பான வெறுப்பு. இத்துணை அழிவுகள் நடந்தும் இனப்பிரச் சினைக்குத் தீர்வு காண்பதில் சிங்களப் பேரினவாதம் விருப்புக் கொள்ளவில்லை. தமிழர்களை அழித்தால் அது பயங்கரவாத ஒழிப்பு.
தமிழர்கள் சமஷ்டி என்று கேட்டால், அது தனி நாட்டுக்கான கோரிக்கை. அப்படியானால் நீங்கள் எங்களுக்கு என்னதான் தரப்போகிறீர்கள்? அதை யாவது சொல்லுங்கள் என்றால்,
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முன்னதாக மகிந்த ராஜபக்சவின் எதிர்ப்புக்கு ஈடுகொடுக்க வேண்டும். விமல் வீரவன்ச போன்ற இனவாதிகளின் பலத்தை சமாளிக்க வேண்டும் என்றவாறு கதை அளக்கப்படுகிறது.
உண்மையில் எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பது தான் நிஜம்.
நீங்கள்தான் எங்களைக் கொன்றொழித்துக் கொடுமைப்படுத்தி நிட்டூரம் தந்தீர்கள்; தருகிறீர்கள் என்றால் நீதிமறந்த இந்த உலகமும் அதர்மத்திற்கு உடன்பட்டு எங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை பெற்றுத்தரவில்லை என்பதை நினைக்கும்போது நாங்கள் சபிக்கப்பட்டவர்களா? அல்லது நம் மண்ணில் நடந்த தியாகத்தை மறந்தவர்களா? அல்லது இனப்பற்று இல்லாதவர்களா? என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்தக் கேள்விக்குள் 30 ஆண்டு காலம் மண் மீட்பு போரை நடத்திய ஓர் இனத்தில் எங்களுக்கு இப்படி யொரு அரசியல் தலைமை.
தமிழனை விலைக்கு விற்றுப் பதவிபெற்று பகட்டு வாழ்வு வாழ்கின்ற போக்கிலித்தனம்.
தேர்தலில் கூட வெற்றியை தோல்வியாக்கி, தோல்வியை வெற்றியாக்கி மக்களின் வாக்களிப்பையே அர்த்தமற்றதாக்கும் அராஜகத்தனங்கள்; நிலைமை இப்படியாக இருக்க,
சர்வதேச சமூகமோ செத்தவன் தமிழன். அதற்கு நீதி கொடுப்பதாக இருந்தாலும் எனக்குக் கிடைக்கும் இலாபம் என்ன என்று கேட்கின்ற அளவில் உயிரிழந்த எம் உறவுகளே! இங்கு யாரிடமும் நீதியில்லை – நியாயம் இல்லை. எங்கும் புகழ் வேண்டல், எங்கும் பதவியாசை.
சீ! இவ் உலகைவிட மறுமை உங்களுக்கு நிம்மதியைத் தரட்டும். காலமும் கடவுளும் கண்விழித்தால், தமிழருக்கு விமோசனம் கிடைத்தால் மட்டும் உங்கள் மறு பிறப்புப் பற்றி முடிவெடுங்கள். அதுவரை அமைதி கொள்க.
வலம்புரி:ஆசிரிய தலையங்கம்