மோசமான வானிலை: வடக்கில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்வு!

0
245

floods-sri-lanka-generalநாடு முழுவதும் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய அடைமழை காரணமாக வட மாகாணத்தில் இயல்புநிலை ஸ்தம்பித்ததுடன் 2 நாட்களில் 4ஆயிரத்து 414 குடும்பங் களைச்சேர்ந்த 15 ஆயிரத்து 833 பேர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந் துள்ளனர். இதில் கிளிநொச்சி மாவட்டமே அதிகளவான பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் அங்கு 7 ஆயிரத்து 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் நேற்றைய தினம் மாலை வரை பெற்றுக்கொள்ளப்பட்ட தரவின்படி அதிகளவான மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடும் காற்றினால் பாரிய அளவில் பொருட்சேதங்களும்; ஏற்பட்டுள்ளன. அத்துடன் வடக்கில் 374 வீடுகளும் வெள்ளம் மற்றும் சுழல்காற்றின் காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
அந்த வகையில் அதிகப்படியாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2ஆயிரத்து  159 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 249 பேர் பாதிக்கப்பட்ட துடன் அவர்களில் 75 குடும்பங்க ளைச் சேர்ந்த 242 பேர் 5 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.
அதே வேளை 274 குடும்பங்களைச் சேர்ந்த 934 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். ஒரு வீடு முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 106 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மின்னல் தாக்கியதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து  197 குடும்பங்களைச் சேர்ந்த  5 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 892 குடும்பங்களைச்சேர்ந்த 3 ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அத்துடன்  3 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் 139 வீடுகள் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளன. மேலும் பிற்பகல் 4 மணிக்குப்பின்னர் கரவெட்டி அல்வாய்ப்பகுதியிலும் பருத்தித்துறை அல்வாய் வடக்கு பகுதியிலும் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 35 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் 711 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 186 பேர் பாதிக்கப்பட்டதுடன் அவர்களில் 3 பேர் ஒரு நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளனர். 21 வீடுகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 55 வீடுகள் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 289 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து ஒரு பேர் பாதிக்கப்பட்டதுடன் அவர்களில் 2 குடும்பங்களைச்சேர்ந்த  24 பேர் ஒரு நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளனர்.11 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  சுழல் காற்றினால் 38 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.அத்துடன் ஒட்டிசுட்டான் கட்டைக்காட்டு குளம் உடைப்பெடுத்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 58 குடும்பங்களைச்சேர்ந்த 257 பேர் பாதிக்கப்பட்டதுடன் அவர்களில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். ஒரு வீடு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடும் காற்றினால் பேசாலைப்பகுதி கடற்கரையில் 47 றோலர் படகுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 17 படகுகள் முற்றுமுழுதாக கடலில் மூழ்கியுள்ளன.
அதில் 30படகுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மாந்தை மேற்குப்பகுதியில் 7 படகுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மல்வத்து ஓயா நீர்த்தேக்கம்  11.2 அடியாக உயர்வடைந்துள்ள காரணத்தால் தம்பனிக்கைக்குளம், நானாட்டான் மடுக்கரை கிராமங்களைச்சேர்ந்த மக்களை அவதானமாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கிச்செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது.
இதேவேளை நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் பிரதேச செயலகங்கள் ஊடாக 3 நேர சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதுடன்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீரற்ற காலநிலை தொடற்ச்சியாக காணப்படுவதால் சேதவிபரங்கள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவற்றை எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் தயார்நிலையில் இருப்பதாகவும் அனர்த்தமுகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்கமானது, நாட்டை விட்டு அப்பால் சென்றவண்ணம் இருந்தாலும், வீரியமுள்ள மேகமூட்டம் நாட்டைச் சூழ்கொண்டிருக்கும் வரையிலும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் மோசமான வானிலை நீடிக்கும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 14 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களால், பத்து மாத சிசு உட்பட எண்மர் பலியாகியுள்ளனர். மண்சரிவுகளில் சிக்கி மூவர் காயமடைந்தும், ஆறுகளில் தவறி வீழ்ந்து இருவர் காணாமல் போயும் உள்ளனர். இந்த அனர்த்தங்களினால், 7 வீடுகள் முழுமையாகவும் 111 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இதேவேளை, 1,858 குடும்பங்களைச் சேர்ந்த 5,196 பேர், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இது இவ்வாறிருக்க, நிலவிவரும் சீரற்ற வானிலை தொடர்பாக ஆராய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், விசேட கூட்டமொன்று நேற்று இடம்பெற்றது. இதன்போது, இந்த அனர்த்தங்களால், 31, 062 குடும்பங்களைச் சேர்ந்த 1,28,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதன்போது, உலருணவுப் பொருட்களுக்குப் பதிலாக வழங்கப்படும் கொடுப்பனவின் தொகையை, 150 ரூபாயிலிருந்து 225 ரூபாயாக அதிகரிக்க, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவல்களின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டோர் விவரம்:

கொழும்பு – 4,813 குடும்பங்கள், 4,865 பேர். களுத்துறை – 55 குடும்பங்கள், 256 பேர். இரத்தினபுரி – 534 குடும்பங்கள், 2,220 பேர். கேகாலை – 1,507 குடும்பங்கள். நுவரெலியா – 36 குடும்பங்கள், 162 பேர். கண்டி – 39 குடும்பங்கள், 172 பேர். மாத்தளை – 5 குடும்பங்கள், 16 பேர். காலி – 303 குடும்பங்கள், 1,237 பேர். அநுராதபுரம் – 1 குடும்பம், 7 பேர். பொலன்னறுவை – 32 குடும்பங்கள், 134 பேர். குருநாகல் – 545 குடும்பங்கள், 2,059 பேர். வவுனியா – 4 குடும்பங்கள், 12 பேர்.

இதேவேளை, காலி, பொத்தல பகுதியில் அறுந்து விழுந்த மின்வடத்தைத் தவறுதலாக மிதித்த இருவர் பலியாகியுள்ளனர். அவிசாவளை, தெஹியோவிட்ட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு, இரெக்ட் தமிழ் வித்தியாலய அதிபர் லட்சுமணன் (55), ஆனந்தராஜ் (28), லட்சுமி ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சுமார் இரண்டு அடிக்கு வெள்ளநீர் நிரம்பியிருந்த வீட்டுக்குள் பெற்றோர் மற்றும் சகோதரனுடன் கட்டிலில் உறங்கிக்கொண்டிந்த 10 மாத சிசு, கட்டிலிலிருந்து 16ஆம் திகதி அதிகாலை, கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். வத்தளை, ஹெந்தல அவரகொட்டுவ பிரதேசத்தில் வசிப்போரின் மகளான பாத்திமா சனிஹா என்ற சிசுவே மரணமடைந்துள்ளார். இதேவேளை, எஹலியகொட பனாவல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்திட்டு சரிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அவருடைய மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பனாவல படங்கல பிரதேசத்தில், நீரில் அடித்துச்செல்லப்பட்ட 49 வயதானவர், காணாமல் போயுள்ளார். அதுமட்டுமன்றி, சீதாவாக்க கங்கைக்குள் விழுந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரும் (57) காணாமல் போயுள்ளார்.

மாத்தறை, கும்புருகமுவ குளத்துக்கு அருகில் மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததில், சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை மரணமடைந்துள்ளார். கட்டுநாயக்கவில் பெய்த அடைமழை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மூன்று விமானங்கள், மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவுக்கும் திருப்பிவிடப்பட்டன. இது இவ்வாறிருக்க, இரத்மலானை விமானப்படைத்தளத்தின் விமான ஓடுபாதையில் வெள்ளம் தேங்கி நின்றமையால், நேற்றைய பயிற்சிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டன என்றும், மறு அறிவித்தல் வரையிலும் பயிற்சிகள் பிற்போடப்பட்டுள்ளன என்றும் இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. இதேவேளை, மன்னார் பேசாலைக் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 படகுகள், கடுங்காற்றுக் காரணமாக, சேதமாகியுள்ளன.  திடீரென வீசிய கடுங்காற்றினால், பெரியளவிலான படகுகள் 20 சேதமடைந்ததுடன் ஏனைய 20 படகுகள் கடலில் மூழ்கியுள்ளன. இதேவேளை, மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பொதுமக்கள் வேண்டப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here