முள்ளிவாய்கால் மே 18 தமிழின அழிப்பு நாள் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழீழ மக்களுக்கு எதிராக நடந்த இன அழிப்புக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணை, சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக நடாத்தப்படவேண்டும் என்றும் இப்போது தமிழீழ மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடாத்தப்படும் கட்டமைப்புசார் இன அழிப்பை தடுக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், உலகத்தில் மிகவும் பழமை வாய்ந்த பூர்வீக குடி மக்களாகிய தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும் என்றும், மே 9 ஆம் திகதி மௌரிசியசுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பன் கி மூன்னிடம் , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் தோழமை அமைப்புகளில் ஒன்றான தமிழ் கவுன்சில் திறந்த மடல் ஊடாக கையளித்தார்கள்.
இதை தொடர்ந்து மே 18 ஆம் திகதி மௌரிசியஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் ஈழத்தில் இன அழிப்புக்கு உள்ளான தமிழீழ மக்களுக்கான நினைவு தூபிக்கு அருகாமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் எமது தோழமை அமைப்புக்கள் ஆகிய மௌரிசியசு தமிழ் கோவில்களின் கூட்டமைப்பும், தமிழ் கவுன்சில் அமைப்புகளும் ஒழுங்கு செய்திருக்கின்றார்கள்.
அத்துடன் தென் ஆபிரிக்கா டேர்பன் (Durban) நகரில் தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் மே 22ஆம் திகதி நடைபெறுகின்றது.
இன்று ஈழத் தமிழரின் விடுதலைக்கு உலகத்தில் வாழும் 10 கோடிக்கு மேலான தமிழ் மக்களின் ஆதரவு தளத்தை வலுவாக்கி இந்த நேரத்தில் மே 18 தமிழின அழிப்பு நாளை தமிழ் மக்களின் விடுதலைக்குரிய நாளாக்குவோம்.உலகெங்கும் நடைபெறும் மே 18 தமிழின அழிப்பு நாளில் ஒன்றுகூடி தமிழருக்கு நாடு வேண்டும் என்று தொடர்ச்சியாக அந்த மக்கள் ஆணையை வலியுறுத்துவோம்.