கிளிநொச்சி – பூநகரி, பள்ளிக்குடா பகுதியில் நில அளவை திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட காணி அளவீட்டு நடவடிக்கை மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்குடா பகுதியில் ஆலயம் ஒன்றிற்கு சொந்தமான காணியின் ஒரு பகுதியை இன்று முற்பகல் 9.30 அளவில் நில அளவை திணைக்களத்தினர் அளவிடச் சென்றுள்ளனர்.
கடற்படையினரின் தேவைக்காக காணி அளவீடு செய்யப்படவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை அடுத்து அந்தப் பகுதி மக்களினால் நில அளவைத் திணைக்களத்தினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், நில அளவீட்டுப் பணிக்கான எதிர்ப்புக் கடிதம் ஒன்றும் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவியிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
பள்ளிக்குடா பகுதியில் சுமார் 60 பேர்ச் காணி கடற்படையினரின் தேவைக்காக யுத்த காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் அங்கு சிறிய முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கூறினார்.
யுத்த காலப்பகுதியில் மக்களின் வாய்மொழி மூல வாக்குறுதியின் அடிப்படையில் அந்த காணி கடற்படையினரின் தேவைக்காக பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கெப்டன் அக்ரம் அலவி குறிப்பிட்டார்.
எனினும், சட்ட ரீதியாக குறித்த பகுதியைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று நில அளவை திணைக்களத்தினரால் அளவீடு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
https://youtube.com/watch?v=rSqz1NhQnpc