பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை ஏற்பாட்டில் பாரிசு றிபப்ளிக் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று புதன்கிழமை பிற்பகல் 13.00 மணிமுதல் 17.00 மணிவரை இடம்பெற்றது.
கடும் மழைக்குமத்தியில் தேசியக்கொடியினை ஏந்தியவாறு பொதுமக்கள் குறித்த கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். சிறிலங்காவினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் பிரான்சின் தலைநகர் பாரிசுக்கு அண்மையில் உள்ள நகரங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 05.05.2016 வியாழக்கிழமை ஒள்னே சுபுவா பகுதியில் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 16.00 மணிவரை குறித்த கண்காட்சி இடம்பெற்றிருந்தது.
பெரும் எண்ணிக்கையான வெளிநாட்டு மக்கள் மேற்படி நிகழ்வுகளைப் பார்த்து எமது நாட்டில் இடம்பெற்ற கொடுமைகளை அறிந்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
தொடர்ந்து வரும் மே 18 வரை குறித்த நிகழ்வுகள் பாரிசின் பல பகுதிகளிலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதுடன், பொதுமக்களை குறித்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்துள்ளனர்.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.