மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையில், சிங்களவர்களால் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு சிங்களக் குடியேற்றம் ஒன்று நிறுவப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் மற்றும் செங்கலடி பிரதேச செயலருடன் இணைந்து, காடுகள் அழிக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தைப் பார்வையிட்டுள்ள அவர், இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிடுகையில்,
ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் மேற்கு எல்லையில், 50 ஆயிரம் ஏக்கர் காணி, மட்டக்களப்பு மாவட்ட கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது அந்தப் பகுதியில் நடந்துள்ள காடழிப்பினால் மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தக் காடுகள் அழிப்பின் பின்னணியில் பௌத்த பிக்குகள் இருப்பதாக அறிய முடிகிறது.
அந்தப் பகுதியில், சில நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்புக்கள் தற்போது நிறுவப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் அங்கு மேற்கொள்ளப்படவுள்ள திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கான அறிகுறிகளாகவே அவற்றைக் கருத வேண்டியுள்ளது .
பௌத்த பிக்கு ஒருவர் அந்தப் பகுதியில் தங்கியிருப்பதுடன், புதிதாக பௌத்த வழிபாட்டு தலமொன்றுக்கும் அடித்தளம் இடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.