கனடாவில் அதிகரித்து வரும் காட்டுத் தீயால் மீட்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள காடுகளில் கடந்த செவ்வாய் கிழமை முதல் தீ பற்றி எரிந்து வருகின்றன.
இந்தக் காட்டுத் தீ அல்பெர்டா மாகாணத்தின் சில நகரங்களை முற்றிலுமாக அழித்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காட்டுத் தீயால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஃபோர்ட் மெக்மர்ரி நகரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் விமானம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அங்கிருந்து இதுவரை 80ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்திருக்கின்றது.
கனடாவின் வடக்கேஇ சிக்கியுள்ள சுமார் 25-ஆயிரம் பேரை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் விமானம் மார்க்கமாக வெளியேற்றப்படுகின்றனர்.
ஏனையவர்கள் வாகனம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.இடம்பெயர்ந்தவர்கள் சொந்தக் குடியிருப்புகளுக்கு திரும்புவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம் என்று அல்பர்ட்டாவின் முதல்வர் கூறியுள்ளார்.எண்ணெய் வளம் நிறைந்த பகுதியில் பரவியுள்ள தீயினால் கனடாவின் எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.