போதைவஸ்துப் பாவனை, களவு, கொள்ளை, வாள்வெட்டு, சண்டித்தனம் என இயல்பு நிலை குழம்பிப் போயிருப்பதைக் காணும்போது நெஞ்சம் பதறிக்கொள்கிறது.
இப்படியே நிலைமை போனால் எம் இனத்தின் எதிர்காலம் எப்படியாகும் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே பதறுதலுக்கான காரணமாகும்.
தம் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற நினைப்போடு இருக்கின்ற பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது கொண்ட அளவு கடந்த நம்பிக்கை காரணமாக அவர்களின் நடத்தைகள் பற்றி இம்மியும் கவனம் கொள்ளாமல் உள்ளனர். இதனால் மிக மோசமான சம்பவங்கள் நம் பிரதேசத்தில் நடந்து போயிற்று.
இன்னும் இப்படியான நிகழ்வுகளுக்கு இடம் வைக்கக் கூடாது என மக்கள் சமூகம் ஒன்றுகூடி முடிவு எடுக்கவேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.நாளுக்கு நாள் நம் மத்தியில் நடக்கும் கொள்ளைகளும் வாள் வெட்டுக்களும் ஏற்படுத்தப் போகும் பாதிப்புகள் சாதாரணமானவை அல்ல.
மக்கள் நிம்மதியாக உறங்க முடியவில்லை என்றதொரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டால் யாழ்ப்பாணத்தை – வடபுலத்தை விட்டு வெளியேறி வேறு எங்காவது குடியிருக்கலாம் என்றொரு நிலைமையை ஏற்படுத்திவிடும்.
இது ஏற்கெனவே குறைந்து தேய்ந்துபோயுள்ள வடபுலத்து மக்கள் சனத்தொகையில் மேலும் ஒரு வீழ்ச்சியை உண்டு பண்ணும்.
இது தவிர ஒவ்வொரு விடியலும் துன்பமான செய்திகளோடு தொடங்கி பயத்தோடு முடிவதாக இருக்கும்.
ஆகையால் கொள்ளை, களவு, வாள்வெட்டு, கலாசார சீரழிவு, போதைப்பொருள் பாவனை இவற்றைக் கட்டுப்படுத்த ஊர்கள் தோறும் விழிப்புக்குழுக்கள் அமைக்கப்படுவது அவசியமாகும்.
முன்பெல்லாம் இத்தகைய சமூகப் பிறழ்வுகள் ஏற்படுகின்ற வேளைகளில் பொலிஸார் – பொது மக்கள் நல்லுறவு அமைப்புகளையும் விழிப்புக் குழுக்களையும் அமைத்து நிலைமையை சுமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
எனவே அது போல தற்போது ஊர்கள் தோறும் விழிப்புக்குழுக்களை அமைத்து ஊர் பாதுகாப்பில் ஈடுபடுவது தவிர்க்க முடியாததாகியுள்ளது.
இதற்குப் பொலிஸார் முழுமையான ஒத் துழைப்பை வழங்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள், ஊர்ப் பெரியவர்களை உள்ளடக்கியதாக விழிப்புக்குழுக்களை அமைக்கும் போது, அதன் ஊடாக ஒரு புரிதலும் நெறி தவறுவோரை இனங் காணுதலும் சாத்தியமாகும்.
இதன்மூலம் எங்கள் பிள்ளைகளை வழிப்படுத்தி நெறிப்படுத்தி அவர்களையும் ஆளாக்கும் முயற்சியை சமூகத் தலைவர்களால் செய்ய முடியும்.
ஆகவே ஊர்கள் தோறும் விழிப்புக்குழுக்களை அமைப்பது தொடர்பில் ஒவ்வொரு பிரதேச செயல கங்களும் நடவடிக்கை எடுத்தால், சடுதியாக ஓர் நேர்க்கணிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது நம் தாழ்மையான கருத்து.
– வலம்புரி