மக்களின் பேராதரவுடன் இந்தத் தேர்தலில் நான் வெற்றிபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது வெற்றியின் பின்னர் வளமான சுபீட்சம் மிக்க ஒரு தேசத்தை கட்டியெழுப்புவேன் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எனது அரசியல் பயணம் எந்தவொரு தரப்பினரையும் பழிவாங்கும் நோக்குடன் அமையப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலனறுவையில் உள்ள ஸ்ரீவித்தியாலோக விகாரையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் நேற்றுக்காலை தனது வாக்கினை அளித்தபின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.
பொலனறுவை மாவட்டத்தில் ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் நிறுவப்பட்டிருந்த வாக்குச் சாவடி மற்றும் தொப்பாவெவ மகா வித்தியாலய வாக்குச்சாவடி உள்ளிட்ட ஏனைய வாக்குச் சாவடிகளுக்கு பொலிஸாரினால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டதோடு மேலதிக பாதுகாப்பு கடமைகளுக்கு குறிப்பிட்ட சில இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மறுபுறம் தேர்தல் வாக்கு சாவடிகளின் வாக்கு பதிவுகள் தொடர்பில் உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட சர்வதேச கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
பொலனறுவை மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட பொது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால ஸ்ரீ சேனவின் வருகைக்காக ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் அப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். சுமார் காலை 7.58 மணிக்கு குறித்த வாக்குச் சாவடியை நோக்கி வருகை தந்த மைத்திரிபால சிறிசேன தனது வாக்கினை பதிவு செய்தார். தனது வாக்கினை பதிவு செய்த பின் அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த பொது வேட்பாளர்,
இன்று எமது தேசத்துக்கு மிகவும் சுபீட்சமான ஒரு தினம். காரணம் இலங்கை வரலாற்றில் தேசத் தலைவராக போற்றப்பெறும் எஸ். டப்ளிவ். ஆர். டி. பண்டாரநாயக்க அவர்களின் பிறந்த தினம் அவரது அரசியல் வழிப்பாதையில் 56 ஆவது சமூக புரட்சி மகனாக வழி வந்த நான் வரலாற்று ரீதியில் எனது மக்களின் நலனுக்காகவும் எமது நாட்டை பாதுகாக்கவும் இந்த அரசியல் பயணத்தை தொடர்ந்துள்ளேன். இன்று என் மீது அனைத்து இன மக்களும் பூரண நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்களின் பேராதரவுடன் இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது வெற்றியின் பின்னர் வளமான சுபீட்சமிக்க ஒரு தேசத்தை கட்டியெழுப்புவேன்.
எனது அரசியல் பயணம் எந்தவொரு தரப்பினரையும் பழிவாங்கும் நோக்குடனும் குறிப்பிட்ட சில தரப்பினரை திருப்தியளிக்கும் வகையிலும் அமையாது. எமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது எம்மீது பல்வேறு தரப்பினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட தேர்தல் வன்முறைகள் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கினோம். கடந்த காலத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் எமது பிரசார நடவடிக்கையின் போது ஆளும் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களினால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு எமது கட்சியின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு எமது வெற்றிக்காக பல்வேறு தரப்பினரால் தியாகம் செய்யப்பட்டிருக்கும் இதேவேளை எமது மக்களின் நலனுக்காகவும் எமது நாட்டின் பாதுகாப்பிற்குமான புதிய ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதோடு புத்த சாசனத்தையும் பாதுகாப்பேன்.
இன்று மூவின மக்களாலும் எனக்கு அளிக்கப்படும் பெறுமதிமிக்க வாக்குகளினால் புதிய தேசத்தை உருவாக்குவதோடு எமது மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என தெரிவித்தார்.