அம்பாறையில் கடத்தலை கண்டித்தவர்கள் மீது பிக்கு குழு தாக்குதல் முயற்சி!

0
191

10019முன்னாள் போராளிகள் மீதான நடவடிக்கைகள் மற்றும் வெள்ளை வான் கடத்தலை கண்டித்து காணாமல் போனவர் களை தேடியறியும் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது பெளத்த பிக்கு தலைமையில் அங்கு வந்த குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

காணாமல்போனவர்களை தேடியறியும் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் காலை 10 மணியளவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் முன்னால் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்ட த்தின் இறுதித் தருணத்தின் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மீண்டும் வெள்ளைவான் கலாசாரம் தலைத்தூக்கியுள்ளதுடன், முன்னாள் போராளிகள் மீதான கைதுகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்வது நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தி காணாமல்போனவர்களை கண்டறியும் குடும்ப ஒன்றியத்தினர் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் முன்னால் நேற்றைய தினம் காலை 9 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதில் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த 50 மேற்பட்ட காணாமல் போனோரின் உறவுகள் கலந்து கொண்டு, வெள்ளைவான் கடத்தல் வேண்டாம், நல்லிணக்கத்தை முறியடிக்கும் வெள்ளைவான் கடத்தலை நிறுத்து எனும் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டீ.ஆர்.ரணவீரவிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இதனையடுத்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியலயத்தினை நோக்கி அமைதியான முறையில் ஊர்வலமாக சென்றுள்ளனர். இவர்கள் ஊர்வலமாக செல்லும் போது துண்டுப்பிரசுரங்களை வீதியால் சென்றவர்களுக்கும் கொடுத்துள்ளனர்.
 இதனை அவதானித்த பௌத்த பிக்கு ஒருவர் சிலருடன் இணைந்து வந்து மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்துக்கு முன்னால் நின்றிருந்த ஆர்ப்பாட்டக்காரருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.நீங்கள் இனவாதத்தை தூண்டுகிறீர்கள், தாய்மாரை ஏமாற்றி இந்த ஆர்ப்பாட்டங்களை செய்கிறீர்கள் என கூறியபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை நிலத்தில் தள்ளி விட்டு தாக்க முயன்றுள்ளார்.
இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதுடன் பொலிஸார் தலையிட்டு அக்குழுவினரை அங்கிருந்து அகற்றினர். அதன் பின்னர் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here