சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழினவழிப்பினால் தனது சிறு வயதிலேயே தாயகத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டில் தஞ்சம் புகுந்து வாழ்விடமொழியில் தனது கல்வியைத் தொடர்ந்த அதேவேளை தாய் மொழியையும் மாலதி தமிழ் கலைக்கூடத்தில் பன்னிரண்டாம் ஆண்டுவரை கற்று தேர்ச்சிபெற்றிருந்தார்.
இவர் அரசியல் விஞ்ஞான பட்டப்படிப்பை முடித்து தனது படிப்பின் மூலம் எமது மக்களும் தேசமும் விடுதலைபெற எண்ணினார். புலம்பெயர் இளையோருக்கு முன்னுதாரணமாக கேணல் கிட்டு அரசியல் அறிவுக்கூட பட்டறைகளில் பங்குபற்றி இளையோர் மத்தியில் எமது தேச விடுதலை சார்ந்த தேடுதல்களையும் அறிவூட்டல்களையும் முன்னின்று வழிப்படுத்தினார்.
சிறீலங்கா பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழினப்படுகொலையை, எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஆதாரங்கள் மூலம் டென்மார்க் நாட்டு அரசியல் பிரமுகர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எடுத்துரைத்ததுடன் கேணல் கிட்டு அரசியல் அறிவுக்கூட பரப்புரைப் பிரிவினருடன் இணைந்து ஐரோப்பிய ரீதியிலும் அரசியல் சந்திப்புகளை மேற்கொண்டு தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டியதுடன் தமிழர்களின் நிரந்தர தீர்வு தமிழீழம் என தனது அனுபவத்தினூடாக நிறுவினார்.
அத்துடன் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார். ஒடுக்கப்படும் இனங்களுக்காக இயங்கும் ஏனைய அமைப்புகளுடனும் சமூகப்பணியாளர்களுடனும் நட்பு ரீதியாக தமிழர்களின் போராட்ட நியாயத்தன்மையினையும் எடுத்துக்கூறிவந்தார். இவ்வாறு பல வழிகளில் எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வந்த வேளையில் அவரது இழப்பு எமக்கு ஒரு பேரிழப்பாகும். அவரது மறைவால் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் பெரும் வேதனையடைவதுடன் அவரது இழப்பால் துயருறும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்.