மே18 , தமிழின அழிப்பு நாள். தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகவும் , தங்களது வாழ்வுரிமைக்காகவும் , உலகினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எவராலும் மறுக்க முடியாததுமான சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் , தாயகம் , தேசியம் , தன்னாட்சியுரிமை என்பவற்றுக்கு முற்றுமுழுதான உரித்துடைய தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டம் , இனவழிப்புனூடாக சிங்களப்பேரினவாத அரசபடைகளாலும் அதற்கு முண்டுகொடுத்த வல்லாதிக்க சக்திகளினாலும் நசுக்கப்பட்ட நாள்! தம் தாயகத்தை ஆழமாக நேசித்ததற்காக, உரிமைகளுக்காகப் போராடிய குற்றத்திற்காக ஓர் இனமக்கள் மீது இனவழிப்புக் கூட்டுத்தண்டனை வழங்கப்பட்டகுரூரமான நாள்! மானுடத்திற்கு எதிராக மாபெரும் அநீதி இழைக்கப்பட்ட நாள்! உலகத் தமிழர்களின் நெஞ்சைப்பிழந்து மரணித்தாலும் மறக்கமுடியாத பெரும்துயரவலி தந்த நாள்!
சின்னஞ்சிறிய நிலத்துண்டில், வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, சிங்கள தேசத்தின் இராணுவ முற்றுகையினால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மக்கள், கேட்பார் யாருமின்றி, குஞ்சு குருமன்,பெண்கள் , முதியவர்கள் என்ற வேறுபாடுகள் ஏதுமின்றி, கதவடைக்கப்பட்ட கசாப்புக்கடைக்குள் நிகழ்தப்பட்ட இரத்தக்களரிபோல் எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உயிர்தப்பிய மக்களை முட்கம்பிவேலி முகாம்களுக்குள் விலங்குகளைவிடவும் கேவலமாக அடைத்து வைத்துவிட்டு அவர்களது நிலங்களைப் பறித்துக் கொண்டது சிங்கள அரசு.
சிறிலங்கா இனவாத அரசுகளினால், கடந்த 67 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்மக்கள் மீது தொடர்ச்சியாக திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவந்த இனவழிப்பு நடவடிக்கையின் அதியுச்ச இனவழிப்பே 2009 ஆம் ஆண்டு மே மாத்த்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையாகும். முள்ளிவாய்க்காலில் 70,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பல ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனர்களாகியும், 90,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டும். 30,000மேற்பட்ட சிறார்கள் அனாதைகளாக்கப்பட்டும் உள்ளனர்.மேலும் 146,679 தமிழ் இளைஞர்கள் யுவதிகள் எனப்பலர் காணாமல் போக்கடிக்கப்பட்டுமுள்ளனர்.
போர்முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை வழங்காமல், சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதிலும், தமிழர் தாயகமெங்கும் புத்த விகாரைகளை அமைப்பதிலும், சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதுமாக சிங்கள பெளத்த மயப்படுத்தலிலேயே புதிய அரசும் குறியாக இருக்கின்றது.
இன்று தாயகத்தில் அமைதியான சூழல் நிலவுவதாகவும் , நல்லாட்சி நிலவுவதாகவும் சிங்கள அரசு சர்வதேசத்திடம் கூறிக்கொண்டு மறுபுறத்தில் தமிழர்கள் கைது செய்யப்படுவதும் அவர்கள் நிலங்கள் அபகரிக்கப்படுவதும் தொடர்கின்றது.
அபிவிருத்தி, நல்லாட்சி, நல்லிணக்கம், சலுகைகள் போன்ற ஏமாற்று வார்த்தைகளால் , தமிழர்களின் உரிமைப்போராட்டத்தையும், சிங்கள அரசுக்கு எதிரான சர்வதேச விசாரணையையும் தமிழர்களைக் கைவிடச்செய்யும் நுட்பமான அரசியலும் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கு சில தமிழ்த் தலைமைகள் அரசுக்குத் துணைபோவதும் தம்மினத்தக்கே செய்யும் துரோகமாகும். சிங்கள தேசத்தின் பெளத்த மேலாதிக்கத்தின் கீழ் தமிழர்கள் அடிபணிந்து வாழ்வதே சமாதானத்துக்கான வழிமுறையாகச் சிங்கள அரசாலும் அதன் நலன் விரும்பும் நாடுகளாலும் இன்று முன்மொழியப்பட்டு வருகின்றது.
காலவெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டு மறக்கப்பட்டு விடக்கூடியவை அல்ல எம்மினத்தின் மீது நிகழ்தப்பட்ட இனப்படுகொலை. அவற்றை நாமே மறந்து விடுவோமானால் நம்மினத்தின் மீது மீண்டுமொருமுறை இனப்படுகொலை புரிந்த பெரும் குற்றத்திற்கு நாமே ஆளாவோம்!
இன்று சர்வதேசத்தின் கரிசனை எம்பக்கம் ஒரளவுக்குத் திரும்பியுள்ளது. அதனை முழுமையாக எம்பக்கம் திருப்பவேண்டியதும் , எமது மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதும் எமது கடமையாகும்.
விடுதலை உணர்வோடும் வலிகளின் நினைவுகளைத் தாங்கி படுகொலை செய்யப்பட்ட மக்களினதும் போராளிகளினதும் கனவுகளைச் சுமந்து மே 18 இல் அணிதிரள்வோம்! இனவழிப்பினூடாகவும் நமது தாயக விடுதலைக்கான போராட்டத்தை ஒருபோதும் முடிவுக்கு கொண்டுவர முடியாது என்பதைச் சிங்கள தேசத்திற்கு உணர்த்துவோம்!
சர்வதேச விசாரணையூடாக இனவழிப்புக் குற்றவாளிகளை தண்டனைக்கு உள்ளாக்குவதும் , நமக்கான நீதியினைப் பெற்றுக்கொள்ள சர்வதேசத்தின் முழுமையான கரிசனையைப் பெற்றுக் கொள்வதும் நமது ஒற்றுமையிலும் உறுதியிலுமே தங்கியுள்ளது.
‘இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதி பூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்‘ – தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
மே 18 இனப்படுகொலை நினைவேந்தல் நாளில், இனப்படுகொலைக்கு உள்ளான மக்களினதும் போராளிகளினதும் திருவுருவப் படங்களை அவர்களின் உறவுகள் கைகளில் ஏந்தி – எம்மால் முடிந்தளவு கருப்பு உடை அணிந்து ஒன்றுகூடி, படுகொலைசெய்யப்பட்ட எமது மக்களுக்காய் நீதி குரலெழுப்பும் இவ் நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் பங்கேற்று வரலாற்றுக் கடமையினைச் செய்யுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு;- வர்த்தக நிறுவனங்கள், ஆலயங்கள், தமிழ்ப் பொது அமைப்புக்கள், விளையாட்டு அமைப்புக்கள், தமிழ்ப் பாடசாலைகள், ஊர்ச் சங்கங்கள் எம் இனம் சார்பான தங்களின் பிரதிபலிப்புக்களை, பதாதைகளை தாங்கியவாறு பங்கேற்குமாறும், பெற்றோர்கள் வளர்ந்து வரும் எம் இளையோருக்கு இன உணர்வினையும் தேசிய சிந்தனையினையும் கையளிக்கும் விதமாக தம் பிள்ளைகளுடனும் தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஒன்றிணையுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழ் வர்த்தகர்களுக்கு ஒர் அன்பான வேண்டுகோள் – மே 18 அன்று மாலை 2 மணி30 இற்கு La Chapelle ஊடாக பேரணி செல்லும் அந்த நேரத்தில் உங்கள் வணிக நிலையங்களை மாலை 5மணிவரை மூடி, நமது நீதிக்கான நினைவேந்தல் பேரணியை வலுவூட்டுமாறும், உங்களது கரங்களை இறுகப்பற்றி உரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.
பிரான்சு பாரிசு நகரில் மே 18 ஆம் திகதி ல சாப்பெல் ( La Chapelle) யில் நிலக்கீழ் தொடரூந்து ( Metro ligne 2) இற்கு அருகில் மாலை 2h30 இற்கு ஆரம்பித்து குடியரசு சதுக்கம் (Place de la République)வரை நீதி கூறும் பெரும் எழுச்சி பேரணியாக சென்று நினைவு கூறல் நிகழ்வு நடைபெற்று அவ்விடத்தில் பொது கூட்டம் நடைபெறும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
செய்தி பிரிவு : தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு