இலங்கையின் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் ஊடக சுதந்திர தினம் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை மறைந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வேட்கை என்ற நிகழ்வை நடத்தியது.
இந்த வேட்கை நிகழ்வில் தவபாலன் என்ற ஊடகவியலாளருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது, அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது. இவர் இலங்கையில் நடந்த கடசி யுத்தத்திற்கு பின் காணாமல் போனவர். இவர் இலங்கை இராணுவ வசம் இருப்பதாக இவரது குடும்பத்தினர் நம்புகின்றனர்.
இந்நிலையில் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என சரியாக தெரியாத ஒருவருக்கு மரண அஞ்சலி செலுத்தியது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
யார் இந்த தவபாலன்?
தவபாலன் என்ற பெயரை அறியாத ஈழத்து மக்கள் யாரும் இல்லை. அவர்களின் வலிகளை உணர்வுகளை சர்வதேச அரங்கில் கொண்டு வந்து சேர்பதற்காக தனது வாழ்க்கையை ஊடகத்தினூடாக அர்ப்பணித்த ஒரு ஊடகவியலாளர். இறுதி வரை உறுதியாக தனது பயணத்தை தொடந்து ஈழ விடுதலைக்காக அரும்பாடு பட்டவர். இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த தவபாலனின் குரல் இறுதி யுத்தத்திற்கு பின் இல்லாது போனது.
ஆனால் தவபாலன் உயிரோடு இருக்கிறாரா என்பது இன்றும் சந்தேகமாகவே இருக்கிறது. அவர் இருக்கிறாரா? அல்லது மடிந்தாரா என்பது யாராலும் உறுத்திப்படுத்த முடியாத ஒன்றாகவே இன்றும் உள்ளது. இந்த நிலையில் அவரது மனைவி பிள்ளைகள் அவர் இராணுவத்திடம் சரணடைந்ததை கண்ட உறவுகள் மூலம் அவர் உயிருடன் இராணுவத்திடம் உள்ளார் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள்.
இந்த நிலையில் தான் உதயன் என்ற பத்திரிகை தனது “வேட்கை” நிகழ்வில் தவபாலனின் உருவப்படம் வைத்து அவருக்கு மாலை சூடி விளக்கும் ஏற்றி இறந்தவருக்கான வணக்கம் செலுத்தியுள்ளது.
மனைவியின் கடிதம்:
இந்நிலையில் தவபாலனின் மனைவி உருக்கமான கடித்தம் ஒன்றை வெளியிட்டுள்ளார்,
எங்கள் அன்புக்குரிய உறவுகளே,
வலிகளோடும் துயர்களோடும் ஏழு ஆண்டுகளாக பரிதவிக்கும் தி.தவபாலனின் மனைவியாகிய நான் எழுதிக்கொள்வது,
வன்னியின் இறுதிப்போரின்போது எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கை தொலைத்தவர்களாக இன்றுவரையில் அனாதரவான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்கள் குடும்பத்தலைவராகிய தி.தவபாலன் அவர்கள் வன்னியில் இறுதிவரையில் ஊடகத்தில் பணியாற்றியவர் என்பது அனைவரும் அறிந்தவிடயம்.
போர் முடிவடைந்த நிலையில் அவர் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக சிலர் சொல்லிக்கேள்விப்பட்டோம். அவ்வாறான நிலையில் அவர் மீண்டும் வருவார் என்கின்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு நாட்களையும் கடத்துகின்றோம்.
ஒரு குடும்பத்தில் நிகழ்கின்ற பிரிவின் வலியினை அனுபவித்தவர்களுக்கே உணரமுடியும்.
போருக்குப்பின்னர் என்னுடைய பிள்ளைகளை வளர்ப்பது உட்பட்ட எங்களுடைய குடும்ப சுமைகளை சுமப்பதில் பலத்த நெருக்கடிகளை இன்றுவரையில் சுமந்தே வருகின்றேன்.
ஆனால் எங்களுடைய தேடுதல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தின் ஊடகம் ஒன்று தங்களுடைய ஊடகவியலாளர்களுக்கு நினைவுக்கூட்டம் நடத்துதல் என்ற பெயரில் என்னுடைய கணவர் இறுதிப்போரில் இறந்ததாகத் தெரிவித்து அவருடைய ஒளிப்படத்தை வைத்து சுடரேற்றி மலர்மாலை அணிவித்து பத்திரிகையிலும் பிரசுரித்திருக்கிறது.
இவ்வாறான நடவடிக்கையால் மிகுந்த மன உழைச்சலையும் வேதனையையும் நானும் எனது பிள்ளைகளும் சந்தித்திருக்கிறோம். இவ்வாறான ஒரு முடிவினை அவர்கள் எந்த அடிப்படையில் மேற்கொண்டார்கள் என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது.
என்னுடைய கணவர் இறுதிப்போரில் உயிரிழந்ததைப் பார்த்தவர்கள் எவரும் இல்லை. அவர் தொடர்பில் நிகழ்வினை நடத்திய ஊடகம் எங்களிடம் கேட்கக்கூட இல்லை.
இவ்வாறான அவர்களுடைய பொறுப்பற்ற நடவடிக்கை மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கின்ற எங்களை துயரத்தில் தள்ளுவதாகவே அமைந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் அமைப்புக்களிடம் முறையிடலாம் என்று எண்ணுகிறோம்.
சமூகத்துக்காக பொறுப்புடன் செயலாற்றவேண்டிய இவ்வாறான ஊடகங்கள் சுயலாப நோக்கில் செயற்படுவதாகவே எங்களால் எண்ணத் தோன்றுகிறது. வலிகளோடு வாழ்ந்து வாழ்ந்தே மரத்துப்போன இதயங்களுடன் இருக்கும் எங்களுக்கு உரியவர்கள் உதவி செய்யாதுவிடினும் பறவாயில்லை துயரத்தைத் தரவேண்டாம் என்று வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
என தவபாலனின் மனைவி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதமும், குறிப்பிட்ட பத்திரிகை தவபாலனுக்கு செய்த மரண அஞ்சலியும் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.