விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு தலைவராக செயற்பட்டதாக தெரிவிக்கப்படும் கே. கலைநேசன் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபா என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கலைநேசன், மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் பகுதியில் வைத்து, தீவிரவாத விசாரணை பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட இவர், புனர்வாழ்வளிக்கப்பட்டு கடந்த 2013 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் .
இதேவேளை, சாவகச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, இச்சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளும் இக்கைதுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அழைத்துச் செல்ல வந்துள்ளதாக தெரிவித்து, சிலர் தமது வீட்டுக்கு வந்ததாகவும், அவர்கள், தாம் பொலிஸார் எனத் தெரிவித்த போதிலும், அவர்கள் தம்மை உரிய முறையில் அடையாளப்படுத்தாத நிலையில், தனது கணவரை அழைத்துச் செல்ல இடமளிக்கவில்லை என கலைநேசனின் மனைவி கயல்விழி தெரிவித்தார்.
அதனை அடுத்து, இன்று (02) பிற்பகல் காத்தான்குடியில் பொலிஸாருடன் வந்த பாதுகாப்புப் படையினரால் தனது கணவர் அழைத்துச் செல்லப்பட்டதாக அவரது மனைவி கயல்விழி தெரிவித்தார்.