இராணுவ புலனாய்வுப் பிரிவு என்று கூறிக்கொண்டு வீட்டினுள் நுழைந்த ஐந்து பேர் கொண்ட ஆயுதக் குழு ஒன்றினால் பணம், நகைகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. சம்பவம் நேற்று அதிகாலை
2.30 மணியளவில் மல்லாவி கோட்டைசுட்டிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்ற ஐந்து பேர் கொண்ட ஆயுதக் குழு தாங்கள் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்தவர்கள் என்றும் விடுதலைப்புலி உறுப்பினர்கள் பற்றி விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறி கதவினை திறக்கும்படி அதட் டியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த வீட்டின் உரிமையாளர் கதவினை திறந்தபோது கோடரி, கத்தி, பொல்லுகளுடன் வந்த முகமூடி அணிந்திருந்த ஐந்து பேர் வீட்டினுள் புகுந்துள்ளனர்.
வீட்டில் இருந்தவர்களை மிரட்டி முழங் காலில் மண்டியிடும்படி உத்தரவிட்டுள்ளதுடன் வீட்டின் அனைத்து அறைகளையும் சோதனையிட்டுள்ளனர். அவ்வேளை வீட்டினுள் ஒரு அறை பூட்டியிருந்தமையினால் ஆத்திரமடைந்த திருடர் கும்பல் கோடரியால் கதவை கொத்தி தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது அவ்வறையிலிருந்த 12 பவுண் தங்க நகைகள், 8 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையர்கள் திருடியுள்ளனர்.
இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது வீட்டு உறுப்பினர் ஒருவர் தொலைபேசியூடாக உறவினரின் உதவியை நாட முற்பட்டவேளை அதை அறிந்த திருடர்கள் அவரை தாக்கி தொலைபேசியையும் பறித்துச் சென்றுள்ளனர்.
இத் திருட்டுச் சம்பவத்தினால் அப்பகுதியில் அச்ச நிலைமை தோன்றியுள்ளது. சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸாரிடம் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரினால் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை பதிவு செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.