பிரான்சின் தலைநகர் பாரிசில் மேதின ஊர்வலம் நிறைவடைந்த Nation சுற்றுவட்டப் பகுதியில் காவல்துறையினருக்கும் கலகக் காரருக்கும் இடையில் நேற்று இரவு கடும் மோதல் இடம்பெற்றது.
இதனை அடுத்து மேதினத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
மேதினத்தில் கலந்துகொண்ட கலகக் காரர்கள், ஏற்கெனவே தயார் நிலையில் நாலாபுறமும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல்துறையினர் மீது, கற்கள், போத்தல்கள், இரும்புக் கம்பிகள் கொண்டு சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.
இதனைத் தடுத்து நிறுத்தும் முகமாக காவல்துறையினர், ஆற்பாட்டக் காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பெருமளவில் வீசினர். இதுபொதுமக்கள் பெருமளவில் கூடிநின்ற பகுதியில் வீழ்ந்து வெடித்துச்சிதறியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கண் எரிவு மற்றும் சுவாசிக்கமுடியாத நிலையில் கலகக்காரர்களும் பொதுமக்களும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் பலர் சிறு காயங்களுக்கும் உள்ளாகியதைக் காணமுடிந்தது.
தொடர்ந்து இரவு 10 மணிக்குப் பின்னரும் அப்பகுதியில் சிறு மோதல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்து தரிப்பிடங்கள் மற்றும் விளம்பரத் தூண்கள் எல்லாம் ஆற்பாட்டக் காரர்களால் அடித்து நொருக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள், காவல்துறையினரால் பாதுக்காப்பாக வெளியேற்றப்பட்டதுடன், ஆற்பாட்டக்காரர்கள் பலர் கைதுசெய்யப்பட்டனர்.
(களத்தில் இருந்து எரிமலையின் விசேட செய்தியாளர்)