இந்தோனேசியா கடலில் விழுந்து மூழ்கிய விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.62.61 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 28ம் தேதி 162 பேருடன் இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவின் ஜாவா கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜாவா கடலில் விமான பாகங்கள் மற்றும் பயணிகளின் உடல்களை தேடி மீட்கும் பணி நடந்து வருகிறது.
இதுவரை விமானத்தின் 5 பாகங்கள் மற்றும் வால் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விரைவில் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்படும் என்று தேடல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விமான நிறுவனம் பலியானவர்களில் சிலரின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 15 லட்சத்திற்கான டிடியை அளித்துள்ளது. அதை அவர்கள் ஏற்க மறுத்து திருப்பிக் கொடுத்துவிட்டனர். இதையடுத்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 62.61 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.