பிரான்சில் பாரிஸ் நகரின் Bastille நினைவுத் தூபிப் பகுதியில் இருந்து பிற்பகல் 14.00 மணியளவில் ஆரம்பித்த மே 1 தொழிலாளர் நாள் பேரணி பாரிஸின் பிரதான வீதிகளின் ஊடாக நகர்ந்து Nation சுற்று வட்டப் பகுதியைச் சென்றடைந்தது.
வெளிநாட்டவர்களுடன் இணைந்து தமிழ் மக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர். பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நிகழ்வில் தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டிருந்தனர்.
பல்வேறுபட்ட இனங்களினதும் கட்சிகளினதும் அமைப்புகளினதும் ஒன்றிணைந்த அணிவகுப்புக்கு மத்தியில் தமிழ் மக்களின் பேரணியும் இடம்பெற்றது.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் தாங்கிய ஊர்தியின் மத்தியில் பதாதைகளைத் தாங்கியநிலையில் கோசம் எழுப்பியவாறு மக்களும் அணிவகுத்துச் சென்றனர்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தமது கைகளில் தமிழீழத் தேசியக் கொடிகளைத் தாங்கியிருந்ததுடன், ஒலி பெருக்கிகளிலும் உணர்வுமிக்க தமிழீழ எழுச்சி கானங்கள் ஒலித்தமை வெளிநாட்டவர்களை மிகவும் கவர்ந்திருந்தது.
பிரான்ஸ் இளையோர் அமைப்பினரும் உற்சாகத்துடன் மேதினத்தில் கலந்து பிரெஞ்சு மொழியில் எமது போராட்டத்தின் நோக்கம் பற்றி தெளிவாகப் புலப்படுத்தினர்.
பேரணியைப் பார்வையிட்ட வெளிநாட்டு மக்களுக்கு தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய பிரெஞ்சுமொழித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மாலை 19.00 மணியளவில் தமிழ் மக்களின் பேரணி Nation சுற்று வட்டப் பகுதியைச் சென்றடைந்தது அங்கு நினைவுக் கூட்டம் இடம்பெற்றது.
ஆயினும், அங்கு சாதகமற்ற நிலை ஏற்படவே நிகழ்வு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் விரைவாக நிறைவு கண்டது.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.