“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதே தொழிலாளி வர்க்கத்தின் தாரக மந்திரம். ‘சிகாகோ’ புரட்சி தொட்டு இன்று வரை ஒவ்வொரு மே தினத்திலும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் தொழிலாளிகளுக்கு வாழ்வு உண்டா என்பதே இந்த மே தினத்திலும் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி.
உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக உயிர்களைப் பணயம் வைத்துப் போராடியவர்கள் சிகாகோவில் மட்டுமன்றி நமது நாட்டிலும் உள்ளனர். உரிமைகளுக்காக உயிரைக் கொடுத்தவர்களும் உண்டு எனினும் எதற்காக தொழிலாளர்கள் போராடுகிறார்களோ அது இன்றும் கிடைக்கவில்லை. தொழிலாளி வர்க்கமும் அரசியல்வாதிகளும் ஒன்றாய் இணைந்து மே தினம் கொண்டாடினால் மட்டும் இந்த உரிமைகள் கிடைத்துவிடுமா?
தொழிலாளர்களின் சம்பளம் வேலை நேரக் குறைப்பை வலியுறுத்தும் போராட்டங்கள் புரட்சியாக 18 ஆம் நூற்றாண்டில் வலுப்பெற்ற போதும் 14 ஆம் நூற்றாண்டில் இத்தாலியிலும், 15 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸிலும் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளதை வரலாறுகளில் காண முடிகின்றன.
மே தினத்தின் தொடக்கத்தை இரண்டு முக்கிய புரட்சிகள் மூலம் அறிய முடிகின்றது. 1776ல் அமெரிக்காவில் ஏற்பட்ட தொழிலாளர் புரட்சி; அங்கு 13 மாநிலங்களில் புரட்சி வெடித்தது. இதனையடுத்து சிகாகோ தொழிலாளர் புரட்சி 1885 ல் ஆரம்பமாகி 1886 ல் மே தினமாக முதலாம் திகதியில் முடிவுற்றுள்ளது.
“எட்டு மணி நேரம் தொடர்பான போராட்டம் 1886 ல் சிகாகோவில் வெற்றியளித்ததோடு மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
1877ல் சிகாகோவில் நாடு தழுவிய தொழிலாளர்கள் புரட்சி ஆரம்பமானது. அந்த புரட்சியில் பல உயிர்கள் பலியாகி, பலர் காயமுற்ற போதும் எந்த நோக்கத்திற்காக அந்த புரட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை.
1886 ம் ஆண்டு மே முதலாம் திகதியில் 88,000 தொழிலாளர்களின் பங்கேற்புடன் “எட்டு மணித்தியாலம்” போராட்டம் ஆரம்பமானது. 307 நிறுவனங்களின் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் குதித்திருந்தனர்.
அடக்குமுறை அதிகரித்தது. எனினும் போராட்டம் தொடர்ந்தது. புரட்சி வெடித்து இறுதியில் தொழிலாளர்களின் கோரிக்கை வெற்றிகண்டது.
வருடா வருடம் மே தினம் அனுஷ்டிக்கப்பட்ட போதும் தொழிலாளர்களின் தேவைகள் உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு விட்டதா என்ற கேள்விகளோடுதான் இதுவரை மே தினமான தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
தன் உழைப்பை நாட்டின் முன்னேற்றத்திற்காக வழங்கி தன்னலம் கருதாது நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் தொழிலாளர்களின் ஏக்கங்களும் பெருமூச்சுக்களும் தொடர்கின்ற போதும் அதனோடு சம்பந்தப்படாததைப் போன்றதாகவே மே தினங்களைப் பார்க்க முடிகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்கள், ஆடைத் தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், தனியார் துறை தொழிலாளர்கள் என பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிலாளர் வர்க்கத்தினரைக் காண முடிகிறது. இவர்களில் ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்கும் வெவ்வேறு விதமான பிரச்சினைகள் உள்ளன.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்களது அடிப்படைத் தேவைகளே நிவர்த்தி செய்யப்படாத நிலையே காணப்படுகிறது. காடுகளிலும் மேடுகளிலும் நேரம், காலம் என பாராது அர்ப்பணிப்புடன் உழைக்கும் அவர்களுக்கு கால் நீட்டிச் சுதந்திரமாக உறங்க ஒரு சாதாரண வீடு கூட இதுவரை இல்லை.
“லயன் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்ற வாக்குறுதி அரசியல் தலைவர்களாலும் தொழிற்சங்கத் தலைவர்களாலும் காலத்துக் காலம் சந்தர்ப்பவாதத்திற்காக முன்வைக்கப்படுகின்றதே தவிர இன்னும் பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் எட்டடிக் காம்பராக்களிலேயே முடங்கிக் கிடப்பதைக் காண முடிகின்றது.
சில தோட்டப்புறங்களுக்குச் சென்று பார்த்தால் நவீன தொழில்நுட்பம் இந்தளவு வளர்ச்சியடைந்த காலத்திலும் இத்தகைய வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் இருக்கின்றார்களா என்ற வியப்பே மேலிடுகிறது.
தேர்தல் கால வாக்குறுதிகளாக மட்டுமே வீடுகளும், சொந்தக் குடியிருப்புகளும் பிரதேச பாதைகளும், மின்சாரமும் சுத்தமான குடிநீரும் இருந்து வருகின்றதே தவிர நிஜத்தில் அவற்றை தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிப்பதாகத் தெரியவில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் இப்போதெல்லாம் ஒரு கேலிக்கூத்தாகிவிட்டது. இம்முறை பேச்சுவார்த்தைகள் எந்த இணக்கப்பாட்டையும் எட்டாததால் அது செல்லுபடியற்றதாகிவிட்டதும் புதுமையல்ல.
ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு, இரண்டாயிரத்து ஐநூறு ரூபா சம்பள அதிகரிப்பு என அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு வரும் அவர்களின் நிலையை இம்முறை மே தினமாவது மாற்றட்டும் என்பதே எமது பிரார்த்தனையாகிறது.
மே தினம் எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதோ அந்த நோக்கமும் அதன் அர்த்தமும் காண முடியாதவையாகிப் போய்விட்டன.
தொழிலாளர் உரிமைகள் பற்றிப் பேசும் மே தினங்கள், கோஷங்கள் மூலம் வழங்கப்படும் வாக்குறுதிகள் நடைமுறையில் எதையும் பெற்றுக் கொடுப்பதாக இல்லை. அரசியல் கட்சிகளின் கண்காட்சிகளாக மே தினங்கள் இருக்கும் வரை எந்தக் கூட்டத்திற்கு பெருந்தொகை மக்களை கூட்ட முடியும் என்ற எதிர்பார்ப்பில் மட்டும் ஏற்பாடு செய்யப்படும் மே தினங்களில் தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் எதிர்பார்ப்பது மடமைதான்.
தனியார் துறை தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கவும் அவர்களின் ஆகக் குறைந்த சம்பளம் 10,000 ரூபாவாக அமைய வேண்டும் என்ற நியதிகளை களையும் தற்போதைய அரசாங்கம் சட்டமாக்கியுள்ளது. இதனைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை நல்ல சகுனம் தான். இது நடைமுறைக்கு வந்தால் ஆடைத்தொழிற்சாலை மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருப்போர் மனதில் நிச்சயம் பால் வார்க்கும் என்பது உறுதி.
விவசாயத் தொழில், கைத்தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளோரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். வரட்சி, வெள்ளம், பசளைகளின் விலையுயர்வு என பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு தமது விளைச்சலை கரை சேர்ப்போர் நெல்லை நியாயமான விலையில் கொள்வனவு செய்வதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இத்தகைய பிரச்சினைகளுக்கும் இம் முறை மேதினம் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இலட்சக் கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் கொழும்பில் ‘சொச்ச’ சம்பளத்திற்குத் தொழில் பார்க்கும் நிலை உள்ளது. இவர்களின் ஆகக் குறைந்த சம்பளமும் 10,000 ரூபாவாகினால் அவர்களின் எதிர்காலமும் சிறக்க முடியும். 40,000 ற்குக் குறைந்த சம்பளம் பெறுவோருக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கதே.
லோரன்ஸ் செல்வநாயகம் .