சனல்- 4 வெளியிட்ட புகைப்படத்தில் காணாமல் போன தனது இரண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளை இருப்பதாகவும் அவரைத் தேடித்தருமாறும் தாயொருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான சாட்சிகளை பதிதல், மற்றும் புதிய பதிவுகளை மேற்கொள்ளுதல் கடந்த 25ம்திகதி முதல் நேற்று வரை கிளிநொச்சியில் நடைபெற்றது.
இதில் மூன்றாம் நாளான நேற்று முன்தினம் மாலை மேற்படி தாயார் ஆணைக்குழுவிடம் தனது புதிய முறைப்பாட்டை பதிவு செய்தார். தனது பிள்ளை திருநாவுக்கரசு சண்முகராசா(வயது 18 ) மற்றும் திருநாவுக்கரசு தர்மசீலன் (வயது 17) ஆகிய இருவரும் கடந்த 2008ம் ஆண்டின் இறுதியில் விடுதலைப்புலிகளால் இணைக்கப்பட்டனர். அதன் பின்னர் நாங்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்ததால் பிள்ளைகளை காணவில்லை.
அதன் பின்னர் நாங்கள் முகாம்களில் தேடியும் இன்று வரை அவர்களை காணவில்லை.பிள்ளைகள் பற்றிய பதிவுகளை மேற்கொண்டுள்ள போதும் எந்த பதிலும் இதுவரை இல்லை என தாயாராகிய சீதாலட்சுமி தெரிவித்ததுடன் கடந்த மார்ச் மாதம் பத்திரிகையொன்றில் சனல் -4 வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் சில போராளிகளை இராணுவம் கைகளைக் கட்டி உட்கார வைத்துள்ளதை கண்டேன். அவர்களில் எனது மகனான திருநாவுக்கரசு சண்முகராசாவும் இருக்கின்றார்.
அவரைத் தேடிக் கண்டுபிடித்து தாருங்கள் என ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டினை பதிவு செய்ததுடன் காணாமல் போன மற்றைய மகனையும் மீட்டுத்தருமாறு குறித்த தாயார் முறைப்பாட்டினைப் பதிவுசெய்தார்.