பிரான்ஸில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியபோது பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த அடிதடியில் 24 பொலிசார் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்த சீர்த்திருத்த திட்டங்களை அரசு நிறைவேற்றாத காரணத்திற்காக கடந்த மார்ச் 31ம் திகதி முதல் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்றும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Nantes, Lyon, Rennes, and Paris உள்ளிட்ட நகரங்களில் நடந்த இந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதால் பொலிசார் போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
Nantes நகரில் சுமார் 9000 போராட்டக்காரர்கள் கூடியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கும் சிலர் தீ வைத்துள்ளனர்.
Nantes நகரில் இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Nantes நகர மேயர் ஜோஹன்னா ரோலந்து இந்த போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Rennes மற்றும் Lyon நகரங்களில் பொலிசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
பிரான்ஸில் வேலைவாய்ப்பின்மை கடந்த மாதத்தில் அதிகரித்துள்ளது. தொழிலாளர் துறை வெளியிட்ட தகவல் படி கடந்த மாதம் பிரான்ஸில் வேலையில்லாமல் இருந்தவர்களின் எண்ணிக்கை 3.591 மில்லியனாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.