நீதியரசர் விக்கினேஸ்வரனின் சிந்தனைக் கும் கூட்டமைப்பு தலைமையின் சிந்தனைக் குமிடையே ஒரு இடைவெளியை உருவாக்க முயல்கின்ற சிங்கள இனவாதிகளின் செயல் விஷமத்தனமானது. தமிழ் தலைமையை சிங்கள இனவாதிகள் பிரித்தாளும் வகையில் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தரையும் நீதியரசர் விக்கினேஸ்வரரையும் இனவாத கண்கொண்டு தகர்த்தெறிய முயல்வதை சம்பந்தரும் விக்கினேஸ்வரனும் அறியாதவர்கள் அல்ல. சம்பந்தரும் விக்கினேஸ்வரனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர். விக்கினேஸ்வரன் தமிழ் மக்களின் உரிமை பற்றி கடும் கரிசனை கொள்வது தமிழ் மக்கள் அவருக்கு கொடுத்த ஆணை. இது எவ்விதம் பிரிவினையாக முடியும். இனவாதிகளான இராவணாபலய, பொதுபல சேனா, சிங்கள ராவய போன்றவை காமாழைக் கண் கொண்டே தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரிவினை என்னும் கோஷத்துள் அடக்க முயல்கின்றனர் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் தமிழ் தேசிய பணிக்குழுவின் செயலாளரும் முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பச்சை இனவாதிகளான இராவணாபலய, பொதுபல சேனா, சிங்கள ராவய போன்றவை பல்லினம் வாழும் இலங்கையில் சிங்கள தேசம் ஆக்க முயல்வதே பிரிவினைவாதம் தான். இவர்களுக்கு உரிமைகளைப் பற்றி பேசும் தமிழ் தலைவர்களை பிரிவினைவாதிகளாக கூறுவதற்கு என்ன அருகதை இருக்க முடியும். விக்கினேஸ்வரனையும் சம்பந்தரையும் அவர்கள் யார் அவர்கள் அறிவுத்திறன் என்ன? சாணக்கியம் என்ன என்பதை மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஏன் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட ஜே.வி.பி தலைவர்களும் நன்கு அறிவார்கள். இன்றைய காலகட்டத்தில் நன்கு சிந்திக்க கூடிய சிந்தனை தெளிவுள்ள சிங்கள மக்களும் இன்றைய தமிழ் மக்களின் மனோநிலையை நன்கு அறிவார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அரசியல் தலைமை எனும் வகையில் பல்வேறு தடவைகள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தான் தமிழர் அபிலாஷைகளுக்கு ஏற்ற அரசியல் தீர்வு என்பதை வலியுறுத்தி வருகின்றது. மட்டுமின்றி இலங்கை அரச விழாக்களிலும் இலங்கையர் என்னும் வகையில் பங்குபற்றி வருகின்றார்கள். இதைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாத இனவாதிகள் தான், கூட்டமைப்பை தடை செய்யுங்கள், விக்கினேஸ்வரனை கைது செய்யுங்கள், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குங்கள் என்று கூட்டம் போட்டு கூக்குரல் இடுகின்றனர். இந்த இனவாதத்தை நல்ல சிந்தனையுள்ள சிங்கள மக்கள் நன்கு அறிவார்கள்.
விக்கினேஸ்வரன் தமிழர்களுக்கான தீர்வை குழப்புகிறார் என்று டிலான் பெரேரா கூறியிருப்பது வேடிக்கையான விடயம். அரசியல் அமைப்பு மாற்றமோ அல்லது புதிதாக அமைந்தாலோ அதில் தமிழருக்கு இருக்க வேண்டிய தீர்வு இதுதான் என்று கூறியிருப்பவர் நீதியரசர் விக்கினேஸ்வரன். இவர் கூறியிருப்பது பாதகமானதாக இருந்திருந்தால் இதுவரை கூட்டமைப்பு தலைமை அதற்கு பதிலளித்திருக்கும். ஆனால் பரிசீலிக்கின்றார்கள். தனிப்பட்ட நீதியரசர் விக்கினேஸ்வரனே அவருடைய எந்தவொரு பின்னணியிலிருந்து பார்த்தாலும் அவர் ஒரு இனவாதியாக சித்தரிக்கப்பட முடியாது.
ஆனால் தமிழ் மக்கள் கொடுத்திருக்கின்ற மக்கள் ஆணைக்கு விசுவாசமாக அபிலாஷைகளுக்கு விசுவாசமாக அவர் தனது பணியை செய்து வருகின்றார் என்பதுதான் உண்மை என்றார்.