வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய மற்றுமொரு தமிழ் இளைஞர் நேற்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜெயகாந்தன் என்பவரே கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தொழிலின் நிமித்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்று கடந்த 12ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்ட அவர் மேலதிக விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் சென்றபோது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எ.டொமினிக் பிறேமானந் தெரிவித்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் சட்டத்தரணி டொமினிக் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கைதுசெய்யப்பட்ட நபர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் – அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று திங்கட்கிழமை கொழும்பு 4 ஆம் மாடியில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.